Asianet News TamilAsianet News Tamil

ஆவின் பால் பாக்கெட் இனி 3 கலர்ல வரப்போகுதாம் .. இதுல என்னென்ன இருக்கு தெரியுமா?

 பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையிலும் மற்றும் அனைத்து வயதினரும் பருகும் வகையிலும் ஆவின் நிறுவனம் மூலமாக மூன்று வகையான பால் வகைகளை முன்னிறுத்தி சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
 

Aavin 3 variety of milks introduce tvk
Author
First Published Nov 3, 2023, 9:13 AM IST | Last Updated Nov 3, 2023, 9:13 AM IST

பொதுமக்களின் நலனுக்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்ற வகையிலும் மற்றும் அனைத்து வயதினரும் பருகும் வகையிலும் டிலைட் பால், சமன்படுத்தப்பட்ட பால், நிறை கொழுப்பு பால் ஆகிய மூன்று வகையான பால் வகைகளை விற்பனைக்கு கொண்டு வர ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்;- தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பால் விற்பனை நாளொன்றுக்கு சுமார் 15 இலட்சம் லிட்டரும் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனை மாதம் ஒன்றுக்கு சுமார் 30 கோடி ரூபாய் அளவில் பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ழுமுவதும் 10000 க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களின் தேவையை அறிந்து ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பால் மற்றும் பால் உபபொருட்களின் தேவை மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளதால், விற்பனை நிலையங்களை அதிகரிக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மற்றும் சுற்றுலா பகுதிகளிலும் ஆவின் பாலகம் அமைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அவ்வப்போது ஆவின் நிறுவனம் பல்வேறு புதிய பால் மற்றும் பால் உபபொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையிலும் மற்றும் அனைத்து வயதினரும் பருகும் வகையிலும் ஆவின் நிறுவனம் மூலமாக மூன்று வகையான பால் வகைகளை முன்னிறுத்தி
சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

* பசும்பாலில் சராசரியாக 3% முதல் 4% கொழுப்புச் சத்தும் 7.5% முதல் 8.5% வரை இதரச்சத்துக்கள் இருக்கும். இதை அடிப்படையாகக் கொண்டு 3.5% கொழுப்பு மற்றும் 8.5% இதரச்சத்துக்கள் கொண்ட ஆவின் டிலைட் ஊதா நிற பால் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இப்பாலில் வைட்டமின் A மற்றும் D
செறிவூட்டப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வகை பால் பயன்படுத்துவர்களின் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்கும்.

* கொழுப்புச் சத்து குறைவான பால் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பாக வயதானவர்கள், மருத்துவ ஆலோசனை பெற்று பால் அருந்துபவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்களுக்காக சமன்படுத்தப்பட்ட பால் 3.0% கொழுப்பு மற்றும் 8.5% இதரச்சத்துள்ள நீல நிற பாக்கெட்டுகளிலும் மற்றும் இரு முறை சமன்படுத்தப்பட்ட பால் 1.5% கொழுப்பு மற்றும் 8.5% இதரச்சத்துள்ள இளஞ்சிவப்பு பாக்கெட்டுகளிலும் வழங்கப்படுகிறது

* அதிக கொழுப்புச் சத்துள்ள பாலை கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு நிறை கொழுப்பு பால் 6.0% கொழுப்பு மற்றும் 9.0% இதரச்சத்துள்ள ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே மக்களின் தேவையை கருதியும், மருத்துவ ரீதியாக ஏற்புடைய அளவில் நியாயமான விலைக்கு இவ்வகை பால் பாக்கெட்டுகள் எந்தவித தங்கு தடையுமின்றி வழங்கப்பட்டு வருகிறது. பால் அட்டைதாரர்களுக்கு டிலைட் பால், சமன்படுத்தப்பட்ட பால், நிறை கொழுப்பு பால் மற்றும் பிற பால் வகைகள் அட்டைகள் மூலமும் தேவைப்படும் அளவிற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios