முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 24ம் தேதி மர்மநபர்கள் கொள்ளையடிக்க நுழைந்தனர். இதை பார்த்த அங்கிருந்த காவலாளி ஓம்பகதூர் அவர்களை தடுத்தார். இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து பங்களாவில் நுழைந்த மர்மநபர்கள் அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்கள், ஆவணங்களை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து எஸ்பி ரம்பா முராரி தலைமையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டு, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும், கொடநாடு எஸ்டேட் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் 11 பேர் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

இதைதொடர்ந்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சந்தோஷ்சாமி, திபு, சதீசன், உதயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானார். மற்றொரு குற்றவாளியான கனகராஜின் நண்பர் சயன் குடும்பத்துடன் கேரளாவுக்கு காரில் தப்பிச் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரது மனைவி வினுப்பிரியா, 5 வயது குழந்தை நீது ஆகியோர் பலியானார்கள்.

இதற்கிடையில் கேரள மாநிலம், மலப்புரத்தில் திருச்சூரை சேர்ந்த ஜிதின்ராய், வயநாட்டை சேர்ந்த ஜம்ஷீர் அலி ஆகியோரை கேரள போலீசார் கார் மோசடி வழக்கில் கைது செய்தனர். இவர்களுக்கும் கொடநாடு காவலாளி கொலையில் தொடர்பு இருப்பதால் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீலகிரி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த கொள்ளை கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட ஹவாலா கும்பல் தலைவனான மனோஜ் என்ற சாமியாரை போலீசார் தேடிவந்தனர்.

கோவை அருகே வாளையாறு பகுதியில் பதுங்கி இருந்த மனோஜை கேரள போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோத்தகிரி காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

இதையடுத்து சம்பவம் நடந்த கொடநாடு எஸ்டேட்டுக்கு அவரை அழைத்து சென்றனர். காவலாளியை கொன்று கொள்ளை நடந்தது எப்படி? என்பது பற்றி விசாரணை நடத்தினார்கள். அவர் நடித்து காட்டியதை வீடியோவில் பதிவு செய்தனர்.

ஹவாலா கும்பல் மற்றும் கூலிப்படைகளுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே மனோஜ் சாமியார் இந்த வழக்கில் முக்கிய புள்ளியாக செயல்பட்டு இருப்பதால் மேலும் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது முகத்தை மறைத்து மீண்டும் கோத்தகிரி காவல் நிலையம் அழைத்துவந்தனர்.

இதை தொடர்ந்து இன்று சாமியார் மனோஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.