திருவண்ணாமலையில்  ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணை  கற்பழித்த வழக்கில் ஐந்து பேரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமங்களில் கற்றுத்தரப்படும் தியானம் பற்றி ஆய்வு செய்வதற்காக ஆன்மீக சுற்றுலா வந்த ரஷ்யாவை சேர்ந்த இளம் பெண் அலீனா, கடந்த 12 ஆம் தேதி தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அறையை விட்டு வெளியே வராததைக் கண்டு, சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் சென்று பார்த்தபோது ரத்த காயங்களுடன் சுயநினைவு இழந்து மயங்கிக் கிடந்தார்.

இதையடுத்து, போலீசார் அவரை மீட்டு உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அலீனாவின் உடலில் காயங்களும், நகக் கீறல்களும் இருப்பதை பார்த்து  அவரை கூட்டாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை உறுதி செய்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மகிழேந்தி நேற்று மருத்துவமனைக்குச் சென்று அலீனா உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.

இதுகுறித்துப் பேசிய அவர், இந்த சம்பவம் தமிழக மக்களிடையே தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தி உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்றார்.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும். சுய நினைவு இழந்த ரஷ்ய மொழிபேசக்கூடிய ஒருவரைக் கொண்டு அலீனாவிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திருவண்ணாமலை டவுன் போலீசார் விடுதியைக் குத்தகைக்கு எடுத்து நடத்திவந்த திருவண்ணாமலையை அடுத்த வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த நீலகண்டன், பாரதி மற்றும் மணிகண்டன் உள்பட ஐந்து பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து இன்று மாலை அலீனாவிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆன்மீகத்துக்குப் பெயர் பெற்ற திருவண்ணாமலையில் ரஷ்யப் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.