ஆவின் பாலகத்தில் ஓசியில் பால் கேட்டு ரவுடிகள் அடாவடி.! கல்லாப்பெட்டியில் இருந்த பணம் பறிப்பு- வெளியான சிசிடிவி
ஆவின் பாலகத்தில் ஓசியில் பால் பாக்கெட் கேட்டும், பணம் கேட்டும் மிரட்டிய நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பால் முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆவின் பாலகத்தில் ஓசியில் பால் கேட்டு மிரட்டல்
தமிழகத்தில் நாளுக்கு நாள் ரவுடிகள் பணம் கேட்டு மிரட்டும் சம்பவம் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், ஆவின் பாலகத்தில் மர்ம நபர்கள் ஓசியில் பால் கேட்டும், பணம் கேட்டும் மிரட்டிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அடுத்துள்ள சேலையூர் பகுதியில் சண்முகவள்ளி என்பவர் ஆவின் பாலகம் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு கடைக்கு பால் வாங்க வந்த நபர்கள் 5 பால் பாக்கெட்டுகளை வாங்கி விட்டு அதற்கான பணம் தராமலும் கடையில் இருந்த கல்லாப் பெட்டியில் உள்ள பணத்தை தருமாறும் கூறி அந்த பாலகத்தில் பணியாற்றும் ஊழியர் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர். இனி நாங்கள் வரும் போதெல்லாம் பால் பாக்கெட்டுகளை இலவசமாக தர வேண்டும் இல்லையேல் நடப்பதே வேறு என மிரட்டிச் சென்றுள்ளனர்.
ஊழியர்கள் மீது தாக்குதல்
இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகவள்ளியின் கணவர் சாத்தையா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் ஆவின் பாலகத்தில் இருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பால் முகவர்கள் தொழிலாளர் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் பாலகத்தில் பால் பாக்கெட்டுகளை வாங்கி விட்டு கடையில் இருந்த பணத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் பணியில் இருந்தவர் மீது..
குற்றவாளிகளை கைது செய்திடுக
கொலைவெறி தாக்குதல் முயற்சி மேற்கொண்ட ரவுடிகளின் சமூக விரோத செயல்களை வன்மையாகக் கண்டிப்பதுடன் சம்பந்தப்பட்ட ரவுடிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.