A new police inspector attacked the workers to not open the shop

கிருஷ்ணகிரி

புதிதாக பொறுப்பேற்றுள்ள போலீஸ் ஆய்வாளர், ஒசூர் பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் கடைகளைத் திறக்கக் கூடாது என்று கடையில் வேலை செய்பவர்களை அடித்து கடைகளை மூடச் செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளதால் வணிகர்கள், மக்கள் மற்றும் பயணிகள் என அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் பயணிகள் ஒசூர் பேருந்து நிலையத்தில் இறங்கி தமிழகப் பேருந்துகளில் மாறிச் செல்வது வழக்கம்.

ஒசூர் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் 2 ஆயிரத்து 200 பேருந்துகளில் இரவு, பகல் என ஒரு நாளைக்கு சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமான பயணிகள் இப்பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

அவர்களில் முதியவர்கள், குழந்தைகள், தாய்மார்கள் இரவு நேரங்களில் வரும்போது, அங்குள்ள கடைகளில் குழந்தைகளுக்கு பால், முதியவர்கள் டீ, காபி போன்றவை வாங்கி அருந்துகின்றனர்.

இரவு நேரங்களிலும் ஒசூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும். அந்தக் கடைகளில் மின் விளக்கு எரிந்து கொண்டு இருப்பதாலும், மனித நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும் பேருந்து நிலையத்தில் குற்றச் செயல்கள் இரவு நேரங்களில் நடைபெறுவது குறைந்துள்ளது.

சேலம் மாநகராட்சி காவல்துறை ஆணையராக இருந்த அமல்ராஜ் பேருந்து நிலையங்களில் உள்ள கடைகள் இரவு முழுவதும் திறந்து விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஒசூர், சென்னை உள்ளிட்ட அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் இரவு முழுவதும் வியாபாரம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள சிப்காட் காவல் ஆய்வாளர் சரவணன் கடந்த வாரம் ஒசூர் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து, கடைகளில் வேலை செய்து கொண்டிருந்தவர்களை அடித்து, கடைகளை மூடுமாறு கூறியுள்ளார்.

மேலும், இனி இரவு நேரங்களில் ஒசூர் பேருந்து நிலையத்தில் கடைகளை மூட வேண்டும் என எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அதிர்ச்சியடைந்த ஒசூர் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் உள்ள கடை உரிமையாளர்கள் சங்கத்தினர், வெள்ளிக்கிழமை சிப்காட் காவல் நிலையம் சென்று ஆய்வாளர் சரவணனிடம் முறையிட்டனர்.

ஆனால், அவர் கடையைத் திறக்க அனுமதி மறுக்கவே, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மகேஷ்குமாரிடம் முறையிட்டனர். அதற்கு இதுகுறித்து இன்று (சனிக்கிழமை) நடைபெறும் கூட்டத்தில் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.