Asianet News TamilAsianet News Tamil

இலங்கையில் "தனி ஈழம்" கேட்டு செல்போன் கோபுரத்தில் ஏறி போராடியவர் கைது; சிங்கிளாய் கலக்கிய சிங்கம்...

A man arrested for climbing a cellphone tower for Eelam in Sri Lanka
A man arrested for climbing a cellphone tower for Eelam in Sri Lanka
Author
First Published Feb 15, 2018, 6:28 AM IST


நாகப்பட்டினம்

"இலங்கையில் தனி ஈழம் அமைய வேண்டும்" என்று வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளியை காவலாளர்கள் கைது செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுகா அரசூர் ஊராட்சிக்குட்பட்ட கண்டிராஜநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (45). விவசாய தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

நேற்று இவர், மணலகரம் காப்பியக்குடி செல்லும் சாலையில் உள்ள அரசூர் இரயில்வே கேட் பகுதிக்குச் சென்றார். அங்குள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு "தமிழ் வாழ்க! "இலங்கையில் தனி ஈழம் அமைய வேண்டும்".

"சென்னை விமான நிலையத்தில் தமிழ் பெயர்களை அழிக்கக் கூடாது".

"அனைத்து இடங்களிலும் தமிழ் பெயர் இருக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்.

அவர் செல்போன் கோபுரத்தில் ஏறியதையும், அங்கிருந்து முழக்கமிடுவதையும் பார்த்த அந்தப் பகுதி மக்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கு வந்த அவரது குடும்பத்தினர் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கும்படி அவரிடம் கூறினர். ஆனால், ரமேஷ் கீழே இறங்க மறுத்துவிட்டார்.

பின்னர், அந்த பகுதி மக்கள், சீர்காழி தீயணைப்பு நிலையத்திற்கும், கொள்ளிடம் காவல் நிலையம் மற்றும் சீர்காழி துணை காவல்  கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் தகவல் கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து துணை காவல் கண்காணிப்பாளர் சேகர், கொள்ளிடம் காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் அங்கு நிகழ்விடத்துக்கு விரைந்தனர்.

சீர்காழி தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து செல்போன் கோபுரத்தில் இருந்த ரமேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறங்கிவர செய்தனர். அவரை கொள்ளிடம் காவலாளர்கள் கைது செய்தனர்.

"இலங்கையில் தனி ஈழம் அமைய வேண்டும்" என்று வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி ரமேஷ் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் தீயாய் பரவியது. 

Follow Us:
Download App:
  • android
  • ios