ரேஷன் அரிசியா..? பூச்சி அரிசியா..? ரேஷன் லாரியை மடக்கி..போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..
மயிலாடுதுறை அருகே சித்தமல்லி கிராமத்தில் ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து சாலையில் அரிசியைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக பல குடும்பங்கள் வேலை இழந்த சூழ்நிலையில் பலரின் வாழ்வாதாரம் ரேஷன் கடை பொருட்களை நம்பியே இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று அரிசி வாங்க சென்ற மக்கள் அங்கு வழங்கப்பட்ட அரிசி தரமற்ற முறையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அரிசியில் புழு, பூச்சி, வண்டுகள் அதிக அளவில் கிடந்ததாலும் துர்நாற்றம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அரிசியினை கீழே கொட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இன்று மட்டுமல்ல பல மாதங்களாக இதுதான் நடக்கிறது என்று ஆவேசமாக குற்றச்சாட்டை வைக்கின்றனர் பொதுமக்கள்.
மயிலாடுதுறை அருகே உள்ள சித்தமல்லி கிராமத்தில் கடந்த 8 மாதங்களாக தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமாரிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றிரவு சித்தமல்லி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு அரிசி ஏற்றி வந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வருவாய்த்துறை மற்றும் போலீசார் நடத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. மேலும், தரமான ரேஷன் அரிசி வழங்கக்கோரி பொது மக்களும், பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி,பருப்பு என எல்லா பொருட்களும் தரமற்றவையாக இருக்கின்றன என்று தமிழகம் முழுவதும் புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.