விழுப்புரம்

புதுச்சேரியில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு ரூ. 2 இலட்சம் மதிப்புள்ள சாராயத்தை வேனில் கடத்த முயன்றபோது விழுப்புரத்தில் காவலாளர்கள் கண்டுபிடித்தனர். ஓட்டுநர் தப்பியோடியதால் வேனையும், சாராயத்தையும் காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன், உதவி ஆய்வாளார்கள் விஜயகுமார், பிரகாஷ் மற்றும் காவலாளர்கள் நேற்று காலை சாலாமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி வேனை காவலாளர்கள் சந்தேகத்தின்பேரில் கைக்காட்டி நிறுத்தச் செய்தனர். காவலாளர்களைப் பார்த்ததும் நடுரோட்டிலேயே வேனை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் கீழே இறங்கி ஓடினார்.

பின்னர் அருகில் சென்று அந்த வேனை காவலாளர்கள் சோதனை செய்ததில் அதில் 45 அட்டைப்பெட்டிகளில் 2 ஆயிரத்து 160 சாராய பாட்டில்கள் இருந்தது தெரிந்தது.

இதனையடுத்து காவலாளர்கள் நடத்திய விசாரணையில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கோலியனூர், பானாம்பட்டு, சாலாமேடு வழியாக உளுந்தூர்பேட்டைக்கு சாராயத்தை கடத்த முயன்றது தெரிந்தது.

இதனைத் தொடர்ந்து ரூ.2 இலட்சம் மதிப்புள்ள சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் பறிமுதல் செய்து விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு காவலாளரிடம் ஒப்படைத்தனர்.

மதுவிலக்கு அமல்பிரிவு காவலாளர்கள் வழக்குப்பதிந்து தப்பியோடிய கார் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.