தலாக் பிரச்சனையில் உச்சநீதமன்றம் தீர்ப்பை ஏற்க வேண்டும்; காவிரிப் பிரச்சனையில் உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்ற இரட்டை நிலைப்பாட்டோடு மத்திய அரசு செயல்படுகிறது என்று தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர.விமல்நாதன் தெரிவித்தார்.

கர்நாடக அரசு, காவிரியில் டிசம்பர் 15-ஆம் தேதி வரை 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளித்தது. இதனை, டெல்டா பகுதி விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர.விமல்நாதன் தெரிவித்தது:

உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு வரவேற்கத்தக்கது. காவிரியில் டிசம்பர் 15-ஆம் தேதி வரை 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு மதித்து தண்ணீர் திறந்துவிட வேண்டும். தவறினால் தமிழக அரசு, கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டும்.

காவிரி பிரச்னையில் மத்திய அரசு கால நீட்டிப்பு செய்வதற்கு வழிவகை செய்கிறதே தவிர, அதற்கு நீரந்தர தீர்வு காண ஆர்வம் காட்டவில்லை. மேலும், தேவையில்லாமல் மனுக்கள் கொடுத்து கால நீட்டிப்பு செய்கிறது.

தலாக் பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், நதி நீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என மனு தாக்கல் செய்கிறது. மத்திய அரசு இதுபோன்ற இரட்டை நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது என்றார் விமல்நாதன்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் சாமி. நடராஜன் தெரிவித்தது:

“தற்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு வரவேற்கத்தக்கது. என்றாலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் டெல்டா விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

சாதாரண விவசாயிகளுக்கு இதுபோன்ற தீர்ப்புகள் எல்லாம் தெரியாது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு உள்ளது.

வருகிற 2017-ம் ஆண்டுக்குள்ளாவது இந்த வழக்கை முடித்து டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றார் நடராஜன்.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் வெ. ஜீவகுமார் தெரிவித்தது:

“உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரவேற்கக்கூடியது. காவிரி நடுவர் நீதிமன்றம் போன்று இன்னொரு நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி எடுபடவில்லை. தமிழகத்துக்கு நீதி கிடைப்பதைத் தாமதப்படுத்தவே மத்திய அரசு முயற்சிக்கிறது.

மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுகளை எல்லாம் கர்நாடக அரசு மதிப்பதில்லை. இதை மத்திய அரசு கண்டிக்கவும் இல்லை. இப்போது உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவையாவது மத்திய அரசு கண்காணித்து கர்நாடகத்திடம் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் என்றார் ஜீவகுமார்.