220 ஆண்டுகளாக பூட்டப்படாத வீடு.. தஞ்சையின் மற்றொரு வரலாற்று பொக்கிஷம்!
1898-ம் ஆண்டு புண்ணக்கு என்ற பெண்மணியால் இந்த வீடு கட்டப்பட்டது. இந்த வீட்டை பெண்களாக சேர்ந்து கட்டி உள்ளனர் என்பது தான் கூடுதல் சிறப்பு.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகாவில் குடமுருட்டி ஆற்றின் கரையில் நடுக்காவேரி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் மக்கள் இங்கு வாழ்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுமே, பழமையான சுண்ணாம்பு காரை செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகள் தான் உள்ளன. அந்த வகையில் 220 ஆண்டுகள் பழமையான வீடு ஒன்று இங்கு அமைந்துள்ளது. 1898-ம் ஆண்டு புண்ணக்கு என்ற பெண்மணியால் இந்த வீடு கட்டப்பட்டது. இந்த வீட்டை பெண்களாக சேர்ந்து கட்டி உள்ளனர் என்பது தான் கூடுதல் சிறப்பு.
வீர நாட்டார் என்பவருக்காக புண்ணக்கு என்ற பெண் இந்த வீட்டை கட்டியுள்ளார். வீட்டின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் 2 முக்கிய நிலைகளை கொண்ட இந்த வீடு 2 அடி அகல சுண்ணாம்பு காரை, சுட்ட கல்லால் கட்டப்பட்ட வீடாகும். 220 ஆண்டுகளாக இந்த வீடுகள் பூட்டப்படாமல் உள்ளது என்பது தான் கூடுதல் சிறப்பு.
இங்கு 8 தலைமுறைகளாக கூட்டு குடும்பமாக ஒன்றாக வாழ்ந்து வரும் குடும்பத்தினர். தங்கள் முன்னோர்கள் எப்படி இந்த வீட்டை பராமரித்தார்களோ அதே போன்று பராமரித்து வருகின்றனர். காவிரிக் கரையோரம் அமைந்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் வெள்ளம் வரலாம் என்ற நோக்கில் 8 அடி உயரத்தில் இந்த வீட்டை கட்டி உள்ளனர். 50 பேர் அமரும் வகையில் பெரிய பெரிய திண்ணைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நோக்கில் இந்த வீட்டின் முன்புறமும் பின்புறமும் தாழ்ப்பாழ் அமைக்கப்படவில்லை. இத்தனை தலைமுறை ஆகியும் கூட இன்று வரை தாழ்ப்பாள் அமைக்காமலே இந்த குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த வீட்டில் நெல் கொட்டும் குதிர், உரல் உலக்கை, பெரிய அளவிலான கருங்கால் ஆன ஆட்டுக்கல், அம்மிக்கல் போன்ற பழமையான பொருட்களை இந்த வீட்டில் பார்க்கலாம்.
கோடை காலத்தில் இந்த வீடு குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் சூடாகவும் இருக்கும். கூரை மற்றும் சுவர்கள் வெளியில் உள்ள கடுமையான தட்பவெப்பநிலையைத் தாங்கி, வீட்டிற்குள் சாதகமான வெப்பநிலையைப் பராமரிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. இந்த வீட்டை யாரும் பாகப்பிரிவினை செய்யக்கூடாது என்பதற்காக வீட்டின் ஒருபுறத்தில் படுக்கை அறையும், மறுபுறம் சமையலறையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடும்பத்தில் வாழ்ந்தவர்கள் சென்னை, பெங்களூரு, அமெரிக்கா என எங்கு சென்றாலும், மூத்த தலைமுறையினர் யாராவது இங்கு தங்கி உள்ளனர். தற்போது இருக்கும் தலைமுறையினரும் தங்கள் முன்னோர்களின் வாழ்க்கையை பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். கடந்த இரு நூற்றாண்டுகளில் ஒரு முறை கூட பூட்டப்படாத இந்த வீடு தஞ்சையின் மற்றொரு பொக்கிஷமாக உள்ளது.
பிளாஸ்டிக் இல்லாத, ஜீரோ வேஸ்ட் திருமணம்.. எப்படி சாத்தியமானது?