அரியலூரில் கார் தீப்பிடித்து ஓட்டல் உரிமையாளர் உயிரிழந்தார். காரில் இருந்து இறங்க முடியாமல் தீயில் கருகி பலியானார். முதற்கட்ட விசாரணையில் எரிபொருள் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
காரில் பிடித்த தீ
சாலை விபத்துகள் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று காலை கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் அரியலூர் பகுதியில் ஓட்டல் உரிமையாளர் உயிர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் ஹோட்டல் வைத்து நடத்தி வருபவர் அன்பழகன். இன்று காலை வழக்கம் போல் காலையில் வீட்டில் இருந்து ஓட்டலுக்கு புறப்பட்டுள்ளார். வீட்டில் இருந்து காரை எடுத்து புறப்பட்டு சென்றபோது சுமார் 100 மீட்டர் தூரத்தில் திடீரென கார் தீ பற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அன்பழகன் காரில் இருந்து இறங்க முற்பட்டார்.

ஓட்டல் உரிமையாளர் பலி
ஆனால் தீயானது கொழுந்து விட்டு எரிந்ததால் காரில் இருந்து இறங்க முடியாமல் திணறியுள்ளார். மேலும் கரும்புகையும் சூழ்ந்து கொண்டதால் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அருகில் இருந்தவர்களும் காரில் சிக்கி இருந்த அன்பழகனை மீட்க எவ்ளவோ முயற்சி செய்தும் முடியாத நிலை ஏற்பட்டது. கார் முற்றிலும் எரிந்த நிலையில் ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கருகிய நிலையில் உயிரிழந்த அன்பழகனை மீட்டனர். இச்சம்பவம் குறித்து ஆண்டிமடம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த எரிபொருள் கசிந்ததில் தீப்பற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது.

வயலில் கவிழ்ந்த அரசு பேருந்து
இதே போல கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மதுராந்தகநல்லூர் கிராமத்தில் வயல்வெளி பகுதியில் சிதம்பரத்திலிருந்து சேத்தியாத்தோப்பு நோக்கி சென்ற அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு வயலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. பேருந்தில் ஓட்டுநர், நடத்துனர் உட்பட 35க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.இந் நிலையில் அனைவரும் பலத்த அடிபட்டு, காயம் ஏற்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
