இந்தியாவில் மருத்துவப்படிப்பில் சேருவதற்கான  நுழைவுத்தேர்வு தான் நீட். இந்த தேர்வில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் படி கேள்விகள் கேட்க்கப்படும். மருத்துவம் படிக்க வேண்டும் என்றால், இந்த தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்க இயலும். இந்த தேர்வு மாநில அரசின் கல்வித்திட்டத்தில் பயிலும்  மாணவர்களுக்கு மிகப்பெரிய சவாலான ஒன்று.

இந்த ஆண்டு நடை பெற்ற நீட் தேர்வில், தமிழகத்தில் வெறும் 40 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றும், இந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போனதால், பிரதீபா எனும் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதே போன்ற சோக சம்பவம் சென்ற ஆண்டும் நடந்தது. அனிதா எனும் அந்த மாணவியின் இழப்பை தமிழகத்தில் யாராலும் மறக்கவே முடியாது.

இந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் சென்னையை சேர்ந்த கோடீஸ்வரி எனும் மாணவி காணமல் போயிருக்கிறார். நீட் தேர்வு முடிவுகளை பார்க்க சென்ற இவர், தேர்வில் தான் தோல்வி அடைந்தது தெரிந்ததும், வீட்டிற்கு செல்லாமல் எங்கேயோ சென்றுவிட்டார்.

இவரை காணாததால் பதட்டமான அவரது பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். அதன் பிறகு கோடீஸ்வரி, கடைசியாக அவரது வீட்டிற்கு அனுப்பிய மெசேஜ் மூலம், அவர் இருக்கும் இடத்தை அறிந்த போலீசார், அவரை இன்று பீகாரில் வைத்து மீட்டிருக்கின்றனர்.