விவாகரத்தான பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.47½ லட்சம் ஆட்டையை போட்ட டுபாக்கூர் சாமியார் மற்றும் பல லட்சம் அபேஸ் பண்ண உதவிய அவரது கூட்டாளிகள் என பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி வாசன்நகரை சேர்ந்தவர் திவ்யராஜன். இவரது மகள் நித்யா. இவர் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, தனது 2 மகள்கள் மற்றும் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு நித்யாவுக்கு திருச்சி ரெட்டைவாய்க்கால் வாசன்நகரை சேர்ந்த வைஷ்னுதேவன் என்கிற ரிஷியோகி அறிமுகமானார். அவர் சிவன்ராஜயோகம் என்ற பெயரில் ஆன்மிக அமைப்பை நடத்தி அங்கு சாமியாராக இருந்து வருகிறார். அந்த அமைப்பின் தலைமை பொறுப்பில் நித்யாவின் உறவுக்காரப் பெண் தமிழ்மதி இருந்து வந்தார். இவர் மூலம் தான் இந்த போலிச் சாமியார் அறிமுகம் கிடைத்திருக்கிறது.

அவர்களிடம் நித்யா, தனது குடும்ப கஷ்டங்களை கூறவே, அவர்கள் பிரச்சினைகள் தீர வேண்டுமானால் ஹரித்துவாரில் நடைபெறும் யாகத்தில் பங்குகொள்ள வேண்டும் என்றும், அதற்கு ரூ.6 லட்சத்து 90ஆயிரம் செலவாகும் என்றும் வைஷ்னு தேவன் கூறியதால் அதை நம்பிய நித்யா, அவரது தந்தை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த தொகையில் இருந்து ரூ.6 லட்சத்தை எடுத்து கொடுத்துள்ளார்.

அதில் ரூ.3 லட்சத்தை யாக பணிகளுக்காக ஹரித்துவாருக்கு அனுப்புவதாகவும், மீதமுள்ள ரூ.3 லட்சத்தை தொழிலில் முதலீடு செய்வதாகவும் நித்யாவிடம் கூறியுள்ளனர். அதன்மூலம் மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் கிடைக்கும் என தெரிவித்ததால் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நித்யாவின் தந்தை இறந்து விடவே, தந்தையின் சொத்துகளை ஒவ்வொன்றாக விற்று, அந்த பணத்தை முதலீட்டில் போட்டால் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பயன் அளிக்கும் என  இரட்டிப்பு மடங்கு லாபம் கிடைக்கும் என நித்யாவிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை பல்வேறு தவணைகளில் தந்தையின் சொத்துக்களை மொத்தமாக விற்று நித்யா பணத்தை கொடுத்துள்ளார். அதனை சாமியார் வைஷ்னுதேவன் அவரது கூட்டாளிகளான பொன்மலை ஆயில்மில்ரோடு பகுதியை சேர்ந்த ஜெகதீஷ்ராவ், வாசன்நகரை சேர்ந்த குமரன், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் மூலம் பெற்று, அவரது கைக்கு கிடைக்குமாறு செய்து கொண்டார்.

அதுமட்டுமலாமல், விற்ற சொத்துகள் மூலம் கிடைத்த சுமார் ரூ.47½ லட்சம் வரை அவர்களிடம் நித்யா கொடுத்துவிட்டார். பின்னர் அதற்கான ஒப்பந்தம் எழுதி கேட்டபோது, வைஷ்னுதேவன் உள்பட 5 பேரும் நித்தியாவை மிரட்டினார்களாம். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கோரி திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நித்யா புகார் செய்தார்.

இந்த புகார் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில்,நித்யாவிடம் பணத்தை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து சாமியார் வைஷ்னுதேவன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் சாமியார் வைஷ்னுதேவன் மற்றும் தமிழ்மதி,ஜெகதீஷ்ராவ், குமரன் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.