காவிரி விவகாரத்தில் நமது கோரிக்கைகள் காதில் விழ வைக்க துர்தேவதைகளிடம் பேசி மோடிக்கு வைக்கப்பட்டுள்ள சூனியம் அகற்றுவதாக கூறி போராடிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர் போராட்டத்தால் தமிழகமே ஸ்தம்பித்துள்ளது.  

காவேரிக்காக ஆளுங்கட்சியே உண்ணாவிரதம் நடத்தியது, எதிர்க்கட்சிகள் பந்த், பேரணி என தலைநகரை அதிரவைத்தது. மற்றொரு பக்கமோ மாணவர்களின் போராட்டம் என போராட்டத்தால்ஆங்காங்கே மத்திய மாநில அரசை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், அறந்தாங்கியை சேர்ந்த விவசாயி ஒருவர் காவிரி விவகாரத்தில், இதுவரை யாருமே சிந்திக்காத வகையில், தனது எதிர்ப்பினை புதுவிதமாக செய்துள்ளார்.

அறந்தாங்கி அருகில் உள்ள எருக்கலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அறிஞர் என்பவர்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அறந்தாங்கி - கீரமங்கலம் சாலையில் எருக்கலக்கோட்டை கடை வீதியில் ஒரு கடை வாசலில் பதாகை வைத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனி நபராக உண்ணாவிரதம் தொடங்கினார். இந்த நிலையில் தமிழக மக்களின் கோரிக்கை எதுவும் மோடி காதுக்கு கேட்கவில்லை, மோடிக்கு யாரோ சூனியம் வைத்து விட்டதால் நாம் கதறுவது அவரின் காதுக்கு கேட்கவில்லை. அதனால் 4வது நாளான வெள்ளிக்கிழமை சுடுகாட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதாக கூறினார்.

இதில், சுடுகாட்டிலிருந்து துர்தேவதைகளிடம் பேசி மோடிக்கு வைக்கப்பட்டுள்ள சூனியத்தை விரட்டியடித்துவிட்டு, தமிழக மக்களின் கோரிக்கைகளை மோடி காதுக்கு சூனியம் வைக்கப்போவதாக விவசாயி அறிஞர் தெரிவித்தார். இந்த தகவலை அறிந்த போலீசார் இன்று காலை விவசாயி அறிஞரை கைது செய்தனர்.