ஈரோடு

ஈரோட்டில் போலி காப்பீடு நிறுவனம் நடத்தி ரூ.15 இலட்சம் மோசடி செய்த இருவரில் ஒருவரை காவலாளர்கள் கைது செய்தனர். தலைமறைவான மற்றொருவரை தீவிரமாக காவலாளர்கள் தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (40). இவர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவக்குமாரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், “ஸ்ரீராம் ஜெனரல் என்ற காப்பீடு நிறுவனத்தில் நான் கோவை மண்டல மேலாளராக பணியாற்றி வருகிறேன். எங்களது நிறுவனத்தின் கிளை ஈரோடு சத்திரோட்டில் செயல்பட்டு வருகிறது.

கடந்த மாதம் ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த முபாரக், அக்ரஹாரம் வீதியை சேர்ந்த திலீப்குமார் மற்றும் சிலர் கோவைக்கு வந்து எங்களது நிறுவனத்தின் கிளையில் இருந்து காப்பீடு தொகை தருவதில்லை என்று புகார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த ஆவணங்களை வாங்கி பார்த்தேன். எங்களது நிறுவனத்தின் பெயரிலேயே ஈரோடு பிரப்ரோட்டில் போலியாக காப்பீடு நிறுவனம் நடத்தி வந்தது தெரியவந்தது.

ஈரோடு சோலார் சங்கர் வீதியை சேர்ந்த முரளியின் மகன் குமரேசன் (28), பவானி ராயல் திரையரங்கம் 2–வது வீதியை சேர்ந்த முகமதுஅலியின் மகன் தபராஜ் மைதீன் ஆகியோர் அந்த போலி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். அவர்கள் எங்களது நிறுவனத்தின் பெயரில் ரசீது வழங்கி மோசடி செய்துள்ளனர்.

எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவக்குமார் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் எம்.சண்முகத்திடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், குமரேசனும், தபராஜ்மைதீனும் சேர்ந்து போலி காப்பீடு நிறுவனம் நடத்தி சுமார் ரூ.15 இலட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து குமரேசனை காவலாளர்கள் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தபராஜ்மைதீனை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.