a complaint filed in worker welfare about 55000 IT staffs dismissed

55 ஆயிரம் ஐ.டி. ஊழியர்களை பணியில் இருந்து நீக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாக சென்னை தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் ஐ.டி. ஊழியர்கள் சங்கப் பிரிதிநிதிகள் புகார் மனு அளித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஹெச்.1.பி விசா நடைமுறையைத் தொடர்ந்து இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் பணிகள் வழங்கப்படுவது வெகுவாகக் குறைக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் தங்கி பணிபுரிந்து வரும் இந்தியர்களுக்கும் இந்த விசா நடைமுறை பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில் சட்டவிரோதமாக தங்களை பணியில் இருந்து நீக்க மென்பொருள் நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாகவும், இவ்விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று புதிய ஜனநாயக ஊழியர்கள் சங்கத்தின் ஐ.டி. ஊழியர்கள் பிரிவு ஒருங்கிணைப்பாளர் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்திருந்தார்.

இதற்கிடையே இது தொடர்பாக சென்னை தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் ஐ.டி.ஊழியர்கள் சங்கம் புகார் மனு அளித்துள்ளது. “அதில் இன்ஃபோசிஸ், சி.டி.எஸ். விப்ரோ, டெக் மஹேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றி வரும் 55 ஆயிரம் தொழிலாளர்களை சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்ய நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதகாக தெரிவிக்கப்பட்டுள்ளது.