மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு..! இன்று ஆய்வை தொடங்கும் மத்திய குழு- எப்போது அறிக்கை தாக்கல் செய்யும் .?
மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு நிலையை கண்டறிந்து மத்திய அரசுக்கு அறிக்கை கொடுக்கும் வகையில், மத்திய குழு இன்று சென்னை வருகிறது. இந்த குழு இரண்டு நாட்கள் வெள்ள சேதங்களை பார்வையிடுகின்றனர்.
சென்னையில் வெள்ள சேதம்
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்த பருவ மழை காலத்தின் முதல் புயல் உருவானது. மிக்ஜாம் என பெயரிடப்பட்ட இந்த புயல் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களை புரட்டி போட்டது. இந்த புயல் பாதிப்பால் சென்னையில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டது. திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 109.41 செ. மீட்டர் மழை பெய்து மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியது.
பல இடங்களில் இருந்த நீர் நிலைகள் நிரம்பி வழிந்து ஊருக்குள் புகுந்தது. நீர்நிலைப் பகுதிகள், தாழ்வான பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகள், கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அந்தப் பகுதிகளில் கார், மோட்டார் சைக்கிள் போன்ற பல்வேறு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
ரூ.5060 கோடி நிவாரண உதவி கேட்ட ஸ்டாலின்
இதனையடுத்து வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழக அரசு விரைந்து செயல்பட்டது. பல்வேறு இடங்களில் சிக்கி தவித்தவர்களை படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். மேலும் தமிழக அரசு சார்பாக மத்திய அரசுக்கு நிவாரண நிதி 5060 கோடி ரூபாய் வழங்கும் படி வலியுறுத்தப்பட்டது. இந்தநிலையில் முதற்கட்டமாக மத்திய அரசு 450 கோடி ரூபாய் ஒதுக்கியது. இந்த சூழ்நிலையில் வெள்ள சேதத்தை பார்வையிட மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் சென்னைக்கு கடந்த 7-ந் தேதி வந்தார்.
அவர் ஹெலிகாப்டர் மூலம் சென்று வெள்ள பாதிப்புக்கு உள்ளான இடங்களை பார்வையிட்டார். பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து மத்திய அரசு சார்பாக தமிழகத்திற்கு தேவையான நிதி உதவி அளிக்கப்படும் என தெரிவித்தார்.
ஆய்வு செய்ய தமிழகம் வரும் மத்திய குழு
இந்தநிலையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் சென்னை வரும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி (Kunal Satyarthi ) தலைமையிலான இந்த குழுவில் மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, நிதித்துறை, மின்சாரத் துறை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு இன்று மதியம் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளரோடு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.
அப்போது வெள்ள சேத விவரங்கள் அளிக்கப்படும்.இதனை தொடர்ந்து இந்த குழுவினர் தனியாக பிரிந்து சென்று இன்று மாலை முதல் ஆய்வை மேற்கொள்வார்கள். நாளையும் தொடர்ந்து ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வெள்ள சேதங்கள் தொடர்பாக தங்களது கருத்துகளை தெரிவிப்பார். இதனையடுத்து டெல்லி செல்லும் மத்திய குழு மத்திய அரசிடம் தங்களது ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார்கள்
இதையும் படியுங்கள்
வெள்ளத்தில் சிக்கி முக்கிய ஆவணங்கள் மாயமா.? இலவசமாக பெற 46 சிறப்பு முகாம்.? வெளியான அறிவிப்பு