a case file on modi by nissan company
ஊக்கத்தொகை, வரிச்சலுகை உள்ளிட்ட ரூ.5 ஆயிரம் கோடியை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசு தராமல் இழுத்தடிப்பதால், அதை பெற்றுத்தரக்கோரி சர்வதேச தீர்ப்பாயம் மூலம் பிரதமர் மோடிக்கு நிசான் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜப்பானைச் சேர்ந்த நிசானம், பிரான்ஸைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் தமிழகத்தில் தொழில் தொடங்கினால் வரிச்சலுகை, ஊக்கதொகை உள்ளிட்டவற்ற அளிப்பதாக கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. கடந்த 7 ஆண்டுகளில் நிசான் நிறுவனம் இதுவரை ரூ.61 ஆயிரம் கோடியை தமிழகத்தில் முதலீடு செய்துவிட்டது.ஆண்டுக்கு 4.80லட்சம் கார்களை தயாரித்து வருகிறது.

ஆனால், இதுவரை நிசான் நிறுவனத்துக்கு ஊக்கத்தொகையையும், வரிச்சலுகையையும் தமிழக அரசு அளிக்கவில்லை. இந்த நிறுவனம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியின்படி ஊக்கதொகை, வரிச்சலுகைகளை வழங்காததால் நிறுவனம் இழப்பைச் சந்தித்து வருகிறது என்று நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, சர்வதேச தீர்ப்பாயத்தின் மூலம் இழப்பீடு தொகையையும், வரிச்சலுகையையும் பெற்றுத்தரக்கோரி பிரதமர் மோடிக்கு கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நிசான் நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோசனும் கடந்த ஆண்டு பிரதமர் மோடியைச் சந்தித்து ஆலோசனை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை.
அதன்பின், கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பின், நிசான் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும், மத்திய அரசு, தமிழக அரசு அதிகாரிகளுக்கும் இடையே 12க்கும் மேற்பட்ட முறை ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டும் எந்தவிதமான பயனும் இல்லை என்று பெயர் வெளியிட விரும்பாத தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த அதிகாரி கூறுகையில், “ மத்தியஅரசு அதிகாரிகளும், தமிழக அமைச்சர்களும் நிசானம் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் விரைவில் நிலுவை தொகையை செலுத்திவிடுவதாக உறுதியளித்துள்ளனர். ஆதலால், தீர்ப்பாயம் மூலம் வழக்கதொடர வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். நிசான் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணை டிசம்பர் மாதம் 15-ந்தேதிக்கு பின் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே நிசான் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “ இந்திய அ ரசுடன் நாங்கள் போட்ட ஒப்பந்தத்தின்படி இணைந்து செயல்பட, ஒத்துழைத்து நிறுவனத்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். அதேசமயம், தமிழக அ ரசு எங்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தரவேண்டும். இதுவரை நாங்கள் அனுப்பிய மின்அஞ்சல்களுக்கு பிரதமர் மோடியின் அலுவலகத்தில் இருந்து பதில் இல்லை.

இந்த செயல்பாடு என்பது, ஜப்பான் நாட்டுடன் இந்திய அரசு செய்துள்ள பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தை மீறியசெயலாகும். ஆதலால், சர்வதேச தீர்ப்பாயம்மூலம் நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம்.” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்தியா மீது இதுவரை 20 மேலான வழக்குகள் சர்வதேச தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருக்கின்றன. இது எந்த நாட்டுக்கு எதிராக இல்லாத அளவுக்கு அதிகபட்ச வழக்குகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசுக்கும், நிசானம் நிறுவனத்துக்கும் இடையே பிரச்சினைகள் இந்தியாவில் நிசான் நிறுவனம் சந்திக்கும் பிரச்சினைகளை எடுத்துக்கூறுகிறது. அதுமட்டுமல்லாமல், தமிழகஅரசின் செயல்பாடுகளால், அன்னிய முதலீட்டு ஈர்ப்பு, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குததில் மோடி அரசுக்கு பின்னடைவு ஏற்படும்.
