திறமைக்கு ஏது தடை: மிக்ஸி, ஃப்ரிட்ஜ் போன்ற பொருட்களை ரிப்பேர் செய்யும் பார்வையற்ற நபர்..
கோவையை சேர்ந்த பார்வையற்ற நபர் ஒருவர் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை ரீப்பேர் செய்து வருகிறார்.
கோவையை சேர்ந்த 32 வயதான நபர் சுரேஷ்குமார். தனது ரீப்பேர் கடைக்கு கொண்டு வரப்படும் மிக்ஸியை வெறும் 15 நிமிடங்களில் சரி செய்து மீண்டும் அதனை இயக்குகிறார். அது என்ன பெரிய விஷயமா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் சுரேஷ் முற்றிலும் கண் பார்வையற்றவர் என்பது தான் ஸ்பெஷல். கோவை மாவட்டம் டிவிஎஸ் நகரில் உள்ள கவுண்டம்பாளையத்தில் மிக்ஸி, கிரைண்டர், ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், எல்பிஜி கேஸ் அடுப்பு ஆகியவற்றை ரீப்பேர் செய்யும் சர்வீஸ் செண்டரை சுரேஷ் குமார் நடத்தி வருகிறார்.
இதுகுறித்து பேசிய சுரேஷ் குமார் “ தொடக்கத்தில் மக்கள் என்னிடம் பொருட்களை ரிப்பேர் செய்ய கொடுக்க தயக்கம் காட்டினர். ஆனால் எனது வேலையின் தரத்தை பார்த்த உடன் அவர்கள் என்னை நம்ப தொடங்கினர். இப்போது நான், டபுள் டோர் ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, சீலிங் பேன், கேஸ் அடுப்புகளை ரிப்பேர் செய்து வருகிறேன்." என்று தெரிவித்தார்.
6 வயதாக இருந்த போது மூளைக் காய்ச்சல் ஏற்பட்டதால் சுரேஷ் தனது பார்வையை இழந்துவிட்டார். பின்னர் 5-ம் வகுப்பு வரை அரசு நடத்தி வரும் பார்வையற்றவர்களுக்கான பள்ளியில் படித்து வந்தார். 5-ம் வகுப்பு வரை படித்த அவர் பின்னர் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டார்.
தொடர்ந்து பேசிய சுரேஷ் “ எனக்கு முதலில் எந்த நம்பிக்கையும் இல்லை. எனது அக்கா ரேவதி, சரவணம்பட்டியில் உள்ள எலக்ட்ரிக் பொருட்கள் சர்வீஸ் செய்யும் கடை ஒன்றில் எனக்கு தொழில் கற்றுக்கொடுக்கும் படி கோரிக்கை விடுத்தார். அதுதான் என் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. அதனை ஏற்ற அந்த கடை முதலாளி கிருஷ்ணமூர்த்தி என்னிடம் பொறுமையாக நடந்து கொண்டார். மிக்ஸி, வாஷிங் மெஷின், ப்ரிட்ஜில் உள்ள பல்வேறு பாகங்கள் பற்றியும் அவை எப்படி வேலை செய்யும் என்பது பற்றியும் எனக்கு கற்றுக் கொடுத்தார்.” என்று தெரிவித்தார்.
படிப்படியாக ரிப்பேர் செய்வதை கற்றுக்கொண்ட சுரேஷ் தனது வீட்டின் மிக்ஸியை முதலில் பழுது பார்த்துள்ளார். மிக்ஸி சரியாக இயங்கியது தனக்கு நம்பிக்கையை கொடுத்ததாக சுரேஷ் கூறுகிறார். 6 மாதங்களுக்கு முன்பு சொந்த தொழில் தொடங்க நம்பிக்கை வந்ததாகவு, அதை தொடர்ந்து சொந்தமாக கடை ஒன்றை திறந்ததாகவும் அவர் கூறினார்.
இப்போது அவரின் கடைக்கு ஏராளமான எலக்ட்ரிக் பொருட்கள் சர்வீஸ் செய்ய வருவதாக கூறுகிறார். மேலும் தனக்கு ரூபாய் நோட்டின் மதிப்பை கண்டறிய முடியாது என்பதால், யுபிஐ முறையில் பணம் செலுத்த வாடிக்கையாளர்களை கேட்டு கொண்டுள்ளார். மேலும் பேசிய சுரேஷ் “ என்னால் பார்வையற்ற நபர்களுக்கு எலக்ட்ரிக் பொருட்களை ரிப்பேர் செய்வது பற்றி கற்றுக்கொடுக்க முடியும். எனவே அவர்கள் பேருந்து, ரயில்களில் பிச்சை எடுக்க வேண்டியதில்லை” என்று தெரிவித்தார். இதன் மூலம் யாரை சார்ந்து இல்லாமல் தன் உழைப்பிலேயே சம்பாதிக்கும் சுரேஷ் மாற்றுத்திறனாளிக்கு மட்டுமின்றி அனைவருக்குமே முன்னுதாரணமாக திகழ்கிறார்.
நீதிபதி முன் இன்று ஆஜர் ஆகும் செந்தில் பாலாஜி..! புழல் சிறை காவல் மீண்டும் நீட்டிக்கப்படுமா.?