ஏமாற்றி சொத்தை மாற்றிய மருமகன்.. தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி.. அரசு அதிகாரிகள் அதிர்ச்சி !!
விருத்தாச்சலத்தில் தனது நிலத்தை ஏமாற்றி விட்டதாகவும், அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறி 60 வயது மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மூதாட்டியை ஏமாற்றிய மருமகன்
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சடகோபன் மனைவி தெய்வநாயகி (வயது 60) இவர்களது மகள் ராஜேஸ்வரியை, நெய்வேலி அருகே உள்ள, கீழக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து உள்ளனர். இவர்களுக்கு விஜய பிரபாகரன் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் தெய்வ நாயகியின் கணவர் சடகோபன், உயிர் இழந்து விட்ட நிலையில், அவர்களுக்கு சொந்தமான 3 1/2 ஏக்கர் நிலத்தை, மருமகனான வேலாயுதம், ஏமாற்றி தனது மகன் விஜய பிரபாகரன் பெயரில் பட்டா மாற்றியதாக கூறப்படுகிறது.
இதனால் தன்னை ஏமாற்றி பட்டா மாற்றி விட்டதாக கூறி 60 வயது உடைய தெய்வநாயகி, பல வருடங்களாக பட்டா மாற்றுவதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, மனுக்கள் அளித்து போராடி வருகிறார். இந்நிலையில் விருதாச்சலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு அந்த 60 வயது மூதாட்டியான தெய்வநாயகி, திடீரென அதிகாரிகள் பட்டா மாற்றம் செய்யாமல் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும், சிறுவரப்பூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் 30 ஆயிரம் லஞ்சம் கேட்பதாகவும் ஆவேசமாக தலையில் அடித்துக் கொண்டு, அழுதுகொண்டே கூச்சலிட்டார்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
இதனை பார்த்த அதிகாரிகள் அவரை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது, தனது மருமகன் தன்னை ஏமாற்றி, 3 ஏக்கர் நிலத்தை எழுதி கொண்டதாகவும், தனது நிலத்தை மீட்டு தருமாறு அதிகாரிகளின் காலில் விழுந்து கதறினார். பின்னர் அவ்வூரைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரியை கண்டதும், அவரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஒரு கட்டத்தில், அதிகாரிகள் கூறியதை செவிமடுத்து கேட்காமல் இருந்திருக்கிறார்.
இதனால் ஆத்திரத்தில், பையில் மறைத்து வைத்து இருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் அவரிடமிருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கி எறிந்தனர். பின்னர் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் அமைதியாக மூதாட்டி சென்றார். இச்சம்பவத்தால் விருத்தாச்சலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : "இனி ஜி ஸ்கொயர் முத்துசாமி தான்.. பழைய சேகர்பாபுவை காட்டுங்க பார்க்கலாம்" மார்தட்டும் அண்ணாமலை !
இதையும் படிங்க : DMK: திராவிட மாடல் போய்.. காட்டுமிராண்டி மாடல் ஆகிவிடும் - எச்சரிக்கும் டிடிவி தினகரன் !!