85 Indian fishermen released over - ready to return to the state

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 85 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். 

ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்டோ நான்கு நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய பதற்றமான சூழலைத் தவிர்க்க, இந்திய மற்றும் இலங்கை சிறையில் இருக்கும் இருநாட்டு மீனவர்களை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது.

எல்லை தாண்டி சென்று மீன் பிடித்ததாக, கடந்த மாதம் 4, 5ந் தேதிகளில் 3 சம்பவங்களில் 32 தமிழக மீனவர்களும், 5 மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையால் பிடிபட்டு உள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைபேட்டை மீன்பிடி தளத்தில் இருந்து மீன்பிடி படகில் கடலுக்கு சென்ற 8 மீனவர்கள் 4ந் தேதி கைது செய்யப்பட்டு, இலங்கையின்திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 2 சம்பவங்களில் 2 மீன்பிடி படகுகளில் ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து சென்ற 15 மீனவர்களும், 2 மீன்பிடி படகுகளில் புதுக்கோட்டை மாவட்டம்ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் 5ந் தேதி கைது செய்யப்பட்டனர்.

இவர்கள்தலைமன்னார் மற்றும் காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 85 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். 

இதனைத் தொடர்ந்து இலங்கையின் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் திரிகோணமலை சிறைகளில் இருந்த தமிழக மீனவர்கள் 85 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்கும் உத்தரவை மன்னார் நீதிமன்றம் பிறப்பித்தது.

முதலில் யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 53 பேர் விடுவிக்கப்பட்டனர். பின்னர் வவுனியா சிறையில் இருந்து 24 பேரும் , இறுதியாக திரிகோணமலை சிறையிலிருந்து 8 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் விரைவில் தமிழகம் திரும்ப உள்ளனர்.