கன்னியாகுமரி

நெல்லையில் இருந்து கேரளாவுக்கு 8½ டன் ரேசன் அரிசி கடத்தப்பட்டதை சோதனையின் போது காவலாளர்கள் கண்டறிந்தனர். மேலும், லாரி பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கடத்தலில் தொடர்புடைய மேலும், மூவரை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அஜித்குமார், உதவி ஆய்வாளர் ஜெகன் மற்றும் காவலாளர்கள் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில் ஒழுகினசேரி பாலம் பகுதியில் சோதனையில் இருந்தபோது அந்த வழியாக ஏராளமான மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டு, தார்ப்பாயால் மூடப்பட்டு இருந்த லாரி ஒன்று வேகமாக வந்துக் கொண்டிருந்தது. கோவை மாவட்ட பதிவு எண்ணைக் கொண்ட அந்த லாரியை காவலாளர்கள் மறித்து சந்தேகத்தின் பேரில் தார்ப்பாயை அவிழ்த்து உள்ளிருந்த மூடைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவற்றில் 8½ டன் ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது. பின்னர், காவலாளர்கள் அந்த லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர், பொள்ளாச்சியை சேர்ந்த பரணிகுமார் (36) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், ரே‌சன் அரிசியை நெல்லை மாவட்டம் சிவகிரி பகுதியில் இருந்து கேரளாவுக்கு கொண்டுச் செல்வதும், சிவகிரி பகுதியில் கிலோ ரூ.4, ரூ.5 விலையில் வாங்கி, கேரளாவில் கிலோ ரூ.15, ரூ.16 என்ற விலையில் விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

மேலும் இந்த அரிசி கடத்தலுக்கு நாகர்கோவிலை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும், லாரியின் உரிமையாளர் பொள்ளாச்சியை சேர்ந்த ஜனார்த்தனன் என்ற ஜெகநாதனுக்கும், நெல்லை மாவட்டம் தென்மலையை சேர்ந்த காசி என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காவலாளர்கள் பரணிகுமாரை கைது செய்து, சுமார் ரூ.4½ இலட்சம் மதிப்புள்ள 8½ டன் ரே‌சன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த அரிசி கடத்தலில் தொடர்புடைய மற்ற மூவரை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.