பினாமி அக்கவுண்டில் ரூ.75 கோடி! வசமாக சிக்கிய ஜாபர் சாதிக்! அமாலக்கத்துறை கிடுக்குப்பிடி விசாரணை!
சென்னை ஆவடி காமராஜ் நகர் 2வது தெருவைச் சேர்ந்த ஜோசப் (45) வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர் சோதனையில் ஜாபர் சாதிக் பினாமியாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் ஜாபர் சாதிக் எங்கெங்கு சொத்துக்கள் வாங்கியுள்ளார் என்ற கோணத்தில் அமாலக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த மார்ச் 9-ம் தேதி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் ஜெய்பூரில் வைத்து கைது செய்தனர். இதனையடுத்து டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் ஜூன் 26-ம் தேதியன்று கைது செய்தது. அதன்படி சிறை மாற்று வாரண்ட் மூலமாக திஹார் சிறையில் இருந்து கொண்டுவரப்பட்ட ஜாபர் சாதிக் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். தற்போது அவரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே சென்னை ஆவடி காமராஜ் நகர் 2வது தெருவைச் சேர்ந்த ஜோசப் ஸ்டாலின் (45) வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல, திருவேற்காடு சிவன் கோவில் தெருவில், ஜோசப்பின் 2வது மனைவி ஆயிஷா (35) வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது இரண்டு இடங்களுக்கும் ஜோசப் மற்றும் ஆயிஷா ஆகியோரை அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் ஜாபர் சாதிக் பினாமியாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. அவரது வங்கி கணக்கில் 75 கோடி ரூபாய்க்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஜாபர் சாதிக்கை கொல்கத்தா, ஒடிசா மாநிலத்திற்கு அழைத்து சென்று அவரிடம் இந்த பணம் யாருடையது எதில் முதலீடு செய்யப்பட்டது என்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2வது நாளாக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் வரது வங்கி கணக்கில் 40 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. இந்த பணப்பரிமாற்றத்திற்கான தகுந்த ஆதாரத்தை தெரிவிக்காததால் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோதமாக கிடைக்கப்பெற்ற பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அசையும், அசையா சொத்துக்களை எங்கெல்லாம் வாங்கியுள்ளார். எந்தெந்த பைனான்சியர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை தற்போது அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த 40 கோடி ரூபாய் பணம் எதற்காக வந்தது. போதைப்பொருள் மூலம் கிடைத்த பணமா அல்லது வேறு ஏதேனும் தொழில்கள் மூலம் கிடைத்த பணமா என்பது தொடர்பாக கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.