71 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். மேலும் வீர, தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு விருதுகளையும் அவர் வழங்குகிறார்.

தமிழக அரசின் சார்பில் சென்னை கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படுகிறார்.

கோட்டைக்கு வரும் வழியில் போர் நினைவுச்சின்னத்திற்கு செல்கிறார். அங்கு போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மலரஞ்சலி செலுத்துகிறார்.

இதனைத் தொடர்ந்து முப்படைகளின்  அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு எடப்பாடி பழனிசாமியை, தலைமைச் செயலாளர் அழைத்துச் செல்வார். அங்கிருக்கும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்வார்.

அதை தொடர்ந்து காலை 8.17 மணிக்கு திறந்த ஜீப்பில் ஏறி சென்று, போலீஸ் அணிவகுப்பை அவர் பார்வையிடுவார். அவருடன் ஜீப்பில் அணிவகுப்பு தலைவர் செல்வார்.

பின்னர் கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி செல்கிறார். அங்கு 8.30 மணிக்கு மூவர்ண தேசிய கொடியை அவர் ஏற்றி வைத்து வணக்கம் செலுத்துகிறார்.

அதன்பிறகு,  10 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின உரை நிகழ்த்துவார். விருது  வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, சிறந்த சேவை புரிந்தோருக்கான விருது உள்ளிட்ட வீர தீர செயல்களுக்கான விருதுகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.