சென்னை அடையாறில் சாப்ட்வேர் இன்ஜினியர் வீட்டில் 70 சவரன் நகைகளுடன் வேலைக்கார பெண் எஸ்கேப் ஆனார்.
சென்னை அடையாறு, ஜீவரத்தினம் நகர், 1வது தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி ஐஸ்வர்யா (42). தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கிறார்கள். இவர்களது வீட்டில் மன்னார்குடியை சேர்ந்த வடிவு என்ற பெண், வீட்டு வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை கணவன், மனைவி இருவரும்வேலைக்கு சென்றனர். மாலையில் ஐஸ்வர்யா வீடு திரும்பினார். வீட்டின் கதவு மூடப்பட்டு, தாழ்ப்பாள் போடாமல் இருந்தது. வேலைக்கார பெண் வடிவை காணவில்லை.
பின்னர், படுக்கை அறைக்கு சென்றபோது, அங்கிருந்த பீரோல் உள்ள பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு ஐஸ்வர்யா அதிர்ச்சியடைந்தார். பீரோவில் பார்த்தபோது, அதில் இருந்த 70 சவரன் நகை திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்து அடையாறு உதவி கமிஷனர் அசோகன் மற்றும் சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், ஐஸ்வர்யா வீட்டில் 10 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த மன்னார்குடியை சேர்ந்த வடிவு என்ற வேலைக்கார பெண்தான் நகைகளை திருடிக்கொண்டு தப்பியது தெரிந்தது. இதை தொடர்ந்து போலீசார், வடிவை பிடிக்க மன்னார்குடி விரைந்துள்ளனர்.
