சென்னையில் தனியார் பள்ளி வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவர் பலியான சம்பவத்தில், பள்ளி வாகன ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மாணவன் உயிரிழந்தது குறித்து இன்றைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிக்கு மெட்ரிகுலேஷன் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 

சென்னையில் தனியார் பள்ளி வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவர் பலியான சம்பவத்தில், பள்ளி வாகன ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மாணவன் உயிரிழந்தது குறித்து இன்றைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிக்கு மெட்ரிகுலேஷன் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல் அவரது மகன் தீக்சித். சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேசன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் தீக்சித், இன்று வழக்கம் போல் பள்ளி வேனில் ஏறி பள்ளிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், பள்ளிக்கூடத்தை சென்றடைந்த வேனிலிருந்து அனைத்து மாணவர்களும் இறங்கிய நிலையில், தீக்சித் மட்டும் வேனில் தான் மறந்து வைத்துவிட்டு சென்ற பொருளை எடுப்பதற்காக திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக, வேனை பார்க்கிங் செய்வதற்காக ஒட்டுநர் பூங்காவனம் ரிவர்ஸ் எடுத்துள்ளார். இதனால் வேனில் ஏற முயற்சித்த மாணவர் தீக்சித் ஐ அவர் கவனிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. வேன் திடீரென்று நகர்ந்ததால், மாணவன் தீக்சித் படியில் இருந்து தவறி கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கியுள்ளார். இதனையடுத்து, மாணவனின் கதறல் சத்தம் கேட்டு, வேனை நிறுத்தி, படுகாயமடைந்த மாணவனை மீட்டு, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர் பள்ளி நிர்வாகத்தினர்..

ஆனால், மாணவனை பரிசோத்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பள்ளி வேன் மோதி இரண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது குறித்து இன்றைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தனியார் பள்ளிக்கு மெட்ரிகுலேஷன் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. தனியார் பள்ளி வாகன சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்த 2ம் வகுப்பு மாணவன்