Asianet News TamilAsianet News Tamil

தனி ஒருவன்… இவன் தானோ!... மதுக்கடையை மூடக்கோரி 7-வது சிறுவன் போராட்டம்

7 year old boy protest against tasmac
7 year-old-boy-protest-against-tasmac
Author
First Published Apr 20, 2017, 6:34 PM IST


சென்னை, கேளம்பாக்கத்தை அடுத்த படூர் கிராமத்தில் 3-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் கையில் பதாகையுடன் டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி சாலையில் நின்று போராட்டம் நடத்தியது அனைவரின் கவனத்தையும் ஈரத்துள்ளது.

தேசிய , மாநில நெடுஞ்சாலையில் 500 மீட்டருக்கு அப்பால் தான் டாஸ்மாக் கடை இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, குடியிருப்பு பகுதிகள், பள்ளிக்கூடங்கள் அருகிலும் வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மாநிலம் முழுவதும் பரவலாக மக்கள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல இடங்களிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

படூர் பகுதியலும் இதேபோல் புதிதாக குடியிருப்பு பகுதிக்கு அருகே டாஸ்மாக் கடை சமீபத்தில் திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், போலீசார் தடியடி நடத்தி, அந்த கூட்டத்தை கலைத்து, டாஸ்மாக் கடையை திறக்க உதவி புரிந்தனர்.

இந்நிலையில், இன்று அப்பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன் ஆகாஷ்(வயது7) அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்தினான். பள்ளி செல்லும் சீருடை, தோளில் புத்தகப்பை, கையில் “ குடியை விடு படிக்கவிடு” என்ற பதாகையுடன் டாஸ்மாக் கடை முன் இருக்கும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினான்.

7 year-old-boy-protest-against-tasmac

இதைப்பார்த்த டாஸ்மாக் கடை நிர்வாகிகள், போலீசுக்கும், சோழிங்கநல்லூர் தாசில்தாருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து அந்த சிறுவன் ஆகாஷிடம் பேச்சு நடத்தி அவனை அங்கிருந்து அகற்றினர்.

ஆனால், சிறிது தூரம் சென்ற பின், அந்த சிறுவன் சாலையின் நடுவில் அமர்ந்து, கொதிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினான். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவி, மக்கள் கூடத் தொடங்கினர், ஊடகத்துறையினரும் குவியத் தொடங்கினர். இதனால், பதற்றமடைந்த தாசில்தார், போலீஸ் அதிகாரிகள், அந்தசிறுவனிடம் டாஸ்மாக் கடையை இங்கிருந்து அகற்றுவதாக உறுதி அளித்தனர். உடனடியாக டாஸ்மாக் கடை விற்பனையை நிறுத்தி மூடினர்.

இதையடுத்து, அந்த சிறுவன் தனது போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றான்.ஆனால், மீண்டும் சிறிது நேரத்துக்கு பின் கடையைத் திறந்து வழக்கம் போல் டாஸ்மாக் வியாபாரத்தை தொடங்கினர்.

டாஸ்மாக் கடையை எதிர்த்து பெண்களே அதிக அளவில் போராடி வந்த நிலையில், 7-வயது சிறுவனின் போராட்டம் அனைவரின் ஈர்ப்பையும் பெற்றுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios