திருப்பூர்,

சல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயத்திற்கான தடையை நீக்கக் கோரி டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கும் ஏழு பேருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

பொங்கள் திருநாள் நெருங்குவதால் சல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்தியே தீர வேண்டும் என்ற முனைப்போடு தமிழர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும், முகநூலில் பீட்டாவிற்கு தடை விதித்து, சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டு தமிழர்கள் என்ற ஒற்றுமையோடு மக்கள் சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை போன்ற பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் அவர்களது வெளிநாட்டு நண்பர்களும் சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முகநூலில், “நான் ஒரு தமிழன். நான் சல்லிக்கட்டை ஆதரிக்கிறேன்” என்ற வாசகங்கள் அடங்கிய பதிவுகளை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், வருகிற ஜனவரி 8-ஆம் தேதி சல்லிக்கட்டுக்கு ஆதரவு தரும் படத்தை வாட்ஸ் ஆப்பில் தங்களது புகைப்படமாக வைத்து சல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தும் போராட்டமாக இதனை செயல்படுத்த எண்ணி இருக்கின்றனர்.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏர்முனை இளைஞர் அணி மற்றும் சல்லிக்கட்டு உரிமை மீட்புக்கான இயக்க உறுப்பினர்கள் 7 பேர் சல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி ஜனவரி 2-ஆம் தேதி முதல் டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியர் ஜெயந்தியிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர்.

அதில், “திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏர்முனை இளைஞர் அணி மற்றும் சல்லிக்கட்டு உரிமை மீட்புக்கான இயக்க உறுப்பினர்கள் 7 பேர் சல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயத்துக்கான தடையை நீக்கக்கோரி கடந்த 2–ஆம் தேதி முதல் டெல்லியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

அவர்களுக்கு உரிய பாதுகாப்பையும், இது சம்பந்தப்பட்ட மத்திய மந்திரிகளோடு இவர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து தரும்படி கோரிக்கை விடுத்து மனு அளித்துள்ளனர்.