காஞ்சிபுரம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொளத்தூரில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலை தொழிலாளர்கள் 600 பேர் 8-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூரை அடுத்த கொளத்தூர் பகுதியில், வாகனங்களின் டயர்களை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு நிரந்தர தொழிலாளர்கள், பயிற்சித் தொழிலாளர்கள், நிர்வாக ஊழியர்கள் என சுமார் 1500 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், “நிரந்தரத் தொழிலாளர்கள் சுமார் 600 பேர் தங்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாததைக் கண்டித்தும், தொழிற்சங்கம் அமைக்க நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தை கடந்த 24-ஆம் தேதி தொடங்கினர்.

இந்தப் போராட்டம் நேற்றோடு எட்டாவது நாளை எட்டியுள்ளது. இதுவரை தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தொழிற்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் சினம் கொண்ட தொழிலாளர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.