6 tonnes ration rice smuggled to Kerala Lorry driving escape
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் லாரி மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்ற 6 டன் ரேசன் அரிசியை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுநர் தப்பியோடினார்.
பறக்கும் படை தனி வட்டாட்சியர் ராஜசேகர், தனித் துணை வட்டாட்சியர் சந்திரசேகர், தனி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஊழியர் ஜாண்பிரைட் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டன், களியக்காவிளை அருகே கோழிவிளை பகுதியில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக கேரள பதிவெண் கொண்ட லாரி ஒன்று வந்தது. அதனை சந்தேகித்த நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால், அந்த ஓட்டுநர் லாரியை நிறுத்தாமல் வேகமாக சென்றார்.
உடனே, அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று செறுவாரக்கோணம் பகுதியில் அந்த லாரியை மடக்கிப் பிடித்தனர். எனினும், அதன் ஓட்டுநர் தப்பித்து ஓடிவிட்டார்.
பின்னர், லாரியை அதிகாரிகள் சோதனை செய்ததில், பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில் மொத்தம் 6 டன் ரேசன் அரிசி பதுக்கி வைத்து, கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது.
இதனையடுத்து ரேசன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து அரிசியை காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்கிலும் லாரியை விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்திலும் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
மேலும், ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
