சிங்கப்பூர், துபாயில் இருந்து விமானம் மூலம் கடத்தி வந்த 6 கிலோ தங்க பிஸ்கெட்டுகளை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை வந்த விமானங்களில் பயணம் செய்த பயணிகளை கண்காணித்தனர்.

நள்ளிரவில் சிங்கப்பூரில் இருந்தும், அதிகாலையில் துபாயில் இருந்தும் சென்னை வந்த விமானங்களில் 8 பேர் சந்தேகத்துக்கு இடமாக இருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால், அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது.

இதையடுத்து அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது, அனைவரிடம் இருந்து 6 கிலோ தங்க பிஸ்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.21.8 கோடியாகும். பின்னர், தங்கத்தை கடத்தி வந்த 8 பேரையும் கைது செய்தனர்.