தமிழக ராஜ்யசபா தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசன், வழக்கறிஞர் வில்சன் உட்பட 4 பேரும், அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஜூன் 19-ல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்யசபா தேர்தல் கமல்ஹாசன் வேட்பு மனு தாக்கல் : தமிழகத்தில் காலியாகவுள்ள 6 ராஜ்யசபா பதவியிடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக வழக்கறிஞர் வில்சன், முகமது அப்துல்லா, தொழிற்சங்க தலைவர் சண்முகம், அதிமுக சார்பாக சந்திரசேகர் உள்ளிட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து இதற்கான ராஜ்யசபா தேர்தல் ஜூன் 19ஆம் தேத நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ராஜ்யசபா அதிமுக- திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

இதனையடுத்து திமுக சார்பாக வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, திமுக நிர்வாகி சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். இதே போல அதிமுக சார்பாக வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் 4 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இன்று காலை தலைமைசெயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த கமல்ஹாசனை துனை முதலமைச்சர் உதயநிதி வரவேற்று அழைத்து சென்றார்.

கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல்

இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியான தமிழக சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் சுப்ரமணியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அப்போது திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து அதிமுக சார்பாக இன்பதுரை மற்றும் தனபால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அப்போது, அனைவரும் உறுதிமொழி ஏற்று படிவத்தில் கையொப்பமிட்டனர்.

இதனிடையே ராஜ்யசபா தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 9-ஆம் தேதி கடைசி நாளாகும். ஜூன் 10-ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து ஜூன் 12-ஆம் தேதி வரை வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாளும். எனவே அன்றைய தினமே திமுக மற்றும் அதிமுக சார்பாக 6 பேரும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுட சான்றிதழ் வழங்கப்படும் என கூறப்படுகிறது