555 crores for adayar river

42 கிமீ அடையாறு ஆற்றை சீரமைக்க 555 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அறிக்கை வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 110 வது விதியின்கீழ் அறிக்கை படித்தார். அதில் அவர் கூறியதாவது:

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில் செயல்படும் இந்த அரசின் சார்பாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்ந்த பின் வரும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடன் அட்டல் நகர்ப்புர புத்துணர்வு மற்றும் நகர்ப்புர மாற்றத்திற்கான திட்டத்தின்கீழ் பின் வரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளான சத்துவாச்சாரி, அலமேல்மங்காபுரம் மற்றும் குணவட்டம் ஆகிய பகுதிகளில் 343 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் வேலூர் மாநகராட்சியிலுள்ள 2 இலட்சத்து 62 ஆயிரம் பேர் பயன்பெறுவர்.

கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் 442 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தினால் 2 இலட்சத்து 58 ஆயிரத்து 734 பேர் பயன்பெறுவர்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பொன்மலை மற்றும் அபிசேகபுரம் பகுதிகளில் 325 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 454 பேர் பயன் பெறுவர்.

திருநெல்வேலி மாநகராட்சி இணைப்புப் பகுதிகளில் 326 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 857 பேர் பயன் பெறுவர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடையாறு உப்பங்கழி மற்றும் கழிமுகப் பகுதியின் 358 ஏக்கர் பரப்பளவில் சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அடையாறு நதியின் தொடக்கம் முதல் முகத்துவாரம் வரையிலான 42 கிலோ மீட்டர் தூரத்தை 555 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

முதலமைச்சர் பழனிசாமி இவ்வாறு தெரிவித்துள்ளார்.