55 thousand 163 houses are being constructed in Trichy - Minister is proud of ...
திருச்சி
திருச்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 55 ஆயிரத்து 163 வீடுகள் கட்ட 332 திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன என்று அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் பெருமிதத்தோடு தெரிவித்தார்.
திருச்சி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டங்களில் செயலாக்கம் மற்றும் முன்னேற்றம் குறித்து மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் தலைமைத் தாங்கினார்.
இதில், அமைச்சர் ஆய்வு நடத்தியபோது பாலக்கரை செங்குளம் காலனியில் மதுரை வீரன், காளியம்மன் கோவில் மற்றும் சமுதாய கூடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும், காலனியில் மின்சார வயர்களை தரையில் புதைத்து வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் பேசியது:
‘‘தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியக் கோட்டத்தின் மூலம் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இம்மாவட்டங்களில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக கணக்கெடுப்பின் மூலம் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 359 வீடுகள் தேவையென கண்டறியப்பட்டுள்ளன. அதில், இதுவரை ரூ.1886 கோடியே 23 இலட்சம் மதிப்பில் 55 ஆயிரத்து 163 வீடுகள் கட்ட 332 திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. இத்திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை தமிழக அரசு செய்துள்ளது’’ என்றார்.
இந்தக் கூட்டத்தில் எம்.பி.க்கள் ரத்தினவேல், குமார், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர் (மணப்பாறை), செல்வராஜ் (முசிறி) பரமேஸ்வரி (மண்ணச்சநல்லூர்), தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனரும், முதன்மை செயலாளருமான சம்புகல்லோலிகர், ஆட்சியர் பழனிசாமி மற்றும் பொறியாளர்கள், திருச்சி, தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலர்கள், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து நகராட்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
