சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை மர்ம நபர்கள் விரட்டிச் சென்ற சம்பவம் தொடர்பாக, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடித்து வருவதாக புகார் எழுந்தது. எதிர்கட்சிகளும் தொடர் போராட்டங்கள் மேற்கொண்டனர். இந்த நிலையில் தான் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெண்கள் குழந்தையோடு சென்ற காரை இசிஆர் சாலையில் வைத்து மர்ம நபர்கள் விரட்டி சென்றுள்ளனர். இதனால் அந்த பெண்கள் அலறி துடித்துள்ளனர்.

பெண்களை துரத்திய மர்ம கார்
இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், யார் அந்த மர்ம நபர்கள் என போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். பெண்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காரில் பெண்களை துரத்தி சென்ற இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் சென்ற கார் தங்களின் கார்களின் மீது உரசியதால் தான் இளைஞர்கள் துரத்தி சென்றதாக தகவல் வெளியானது.

5 இளைஞர்கள் கைது
இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் இளைஞர்களை தேடி வந்தனர். ஈசிஆர் சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வும் செய்யப்பட்டது. இதனையடுத்து திமுக கொடி கட்டிய சபாரி கார் மற்றும் தார் கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்துரு என்ற கல்லூரி மாணவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது அவரை ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் இருந்து பெற்ற தகவலையடுத்து மற்ற 4 நபர்களையும் சேர்ந்து மொத்தமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே பெண்களின் துரத்தியது ஏன் என இளைஞர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இது தொடர்பாக முழுமையான தகவல்கள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
