மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் 5 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் மீனாம்பிகை நகரை சேர்ந்தவர்கள் திருப்பதி, குண்டுமணி, பாண்டியராஜன், மட்டை மணி, பிரேம். ரவுடிகளான இவர்கள் மீது பல்வேறு காவல்நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தலைமறைவாக இருந்த அவர்களை போலீசார் தேடி கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். இந்நிலையில், அவர்களின் தாயார்கள், இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஆர்.பி,உதயகுமார் முன்னிலையில் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பிய அமைச்சரின் முன்னிலையில் பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்களது மகன்களை என்கவுண்டர் செய்ய போலீசார் முயல்வதாகவும் அதைத்தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தீக்குளிக்க முயன்றுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.