கைவிட்ட நீதிமன்றம்.. கைது பீதியால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவு.. சுத்து போட களமிறங்கிய 5 தனிப்படைகள்!
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துவிட்டதாக கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் என்பவர் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துவிட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, கரூர்- மேலக்கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதரும், கரூர் டவுன் காவல் நிலையத்தில் நில அபகரிப்பு குறித்து ஒரு புகாரளித்திருந்தார்.
இதையும் படிங்க: என்னைப் பேச அனுமதித்து இருந்தால் கிழிகிழின்னு கிழித்திருப்பேன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதன் அடிப்படையில் ஷோபனா, யுவராஜ், பிரவீன் உள்ளிட்ட மொத்தம் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்ற அச்சப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜூன் 12-ம் தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை ஜூன் 25-ம் தேதி நடந்தபோது எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: இதெல்லாம் ஏமாற்று வேலை.. திமுகவின் முழு நேர தொழிலே இதுதான்.. இறங்கி அடிக்கும் அன்புமணி!
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், முன் ஜாமீனும் மறுக்கப்பட்டதை அடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டிவரும் நிலையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.