நாகை அருகே காவலாளர்களை கண்டதும், மதுபாட்டில்களைக் கடத்தி வந்த ஓட்டுநர் தப்பியோடினார். உடனிருந்தவர் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர் காவலாளர்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாகை மாவட்ட காவல் சூப்பிரண்டு துரை உத்தரவின்பேரில், கூடுதல் துணை காவல் சூப்பிரண்டு தங்கதுரை பரிந்துரையின்படி நாகை மதுவிலக்கு காவலாளார்கள் நாகையை அடுத்த வாஞ்சூர் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து நாகூர் நோக்கி வந்த ஒரு காரை, காவலாளர்கள் மடக்கி நிறுத்தினர். அப்போது காரை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் காவலாளர்கள் அந்த காரைச் சோதித்துப் பார்த்தனர். அதில் 5 அட்டை பெட்டிகளில் 240 மதுபாட்டில்கள் இருந்தது. இதையடுத்து காரில் இருந்த மற்றொருவரை பிடித்து காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அந்த நபர் மயிலாடுதுறை ஆடியார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அந்தோணிசாமி மகன் பெரியநாயகசாமி (48) என்பதும், தப்பியோடிய ஓட்டுநர் அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பதும் தெரியவந்தது.

மேலும், இவர்கள் இருவரும் காரைக்காலில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து காவலாளர்கள் பெரியநாயகசாமியை கைது செய்தனர்.

அத்துடன் அவர் வைத்திருந்த மதுபானங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மதுவிலக்கு காவல் இன்ஸ்பெக்டர் மயில்சாமி மற்றும் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தப்பியோடிய குமாரை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.