பெரம்பலூரில் நடந்த கல்வி மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகளில் 462 மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில், பெரம்பலூர் மற்றும் குன்னம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 4–ஆம் தேதி தொடங்கி 7–ஆம் தேதி வரை நடந்தன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் மற்றும் தடகள வீரர், வீராங்கனைகளுக்கு 14, 17, 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவுகளில் கல்வி மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் பெரம்பலூரில் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

முதன்மை விளையாட்டு போட்டி பிரிவில், கால்பந்து, பூப்பந்து, கையுந்து பந்து, கோ–கோ, கபடி, டென்னிஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகள் நடந்தன. இதில் 462 மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

நாளை (வியாழக்கிழமை) மற்றும் வருகிற 21–ந் தேதி அன்று 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டிகள் நடக்கின்றன. இதில் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன.

2–வது கட்டமாக 25–ந் தேதி ஆக்கி, எறிபந்து, கைப்பந்து, இறகுப்பந்து ஆகிய குழு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகளில் பெரம்பலூர் மற்றும் குன்னம் குறுவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் பங்கேற்கின்றன.

பெரம்பலூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடிக்கும் அணிகள், தடகள வீரர்கள் அடுத்த மாதம் (நவம்பர்) ஜெயங்கொண்டத்தில் நடைபெற உள்ள மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி உடையவர்கள் ஆவர் என்றும், போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வருகிற 21–ந்தேதி மாலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஜலம் ஆகியோர் பரிசுகள் வழங்க உள்ளதாகவும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் தெரிவித்தார்.