40 people arrested for protesting Sterlite shootout Still struggles today ...
இராமநாதபுரம்
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து இராமநாதபுரத்தில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை காவலாளர்கள் கைது செய்தனர். போராட்டம் இன்று தொடர்கிறது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தின்போது காவலாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இதுவரை 12 பேர் பலியானார்கள். மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர்.
இதனைக் கண்டித்து, இராமநாதபுரத்தில் தமிழக மக்கள் மேடை அமைப்பினர் கண்டனப் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
இராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் முன்பிருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து அரண்மனை முன் நிறைவு பெற்றது. பின்னர் அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டச் செயலாளர் எஸ்.பி.ராதா ஆகியோர் தலைமை வகித்தனர்.
அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சேகர், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்து முருகன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இ.கண்ணகி, மின்பொறியாளர் அமைப்பின் மாநிலத் தலைவர் ஆர்.குருவேல், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மயில்வாகனன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்ட செயலாளர் முருகபூபதி, பரமக்குடி நகர செயலாளர் நீ.சு.பெருமாள், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் க.ஜீவா ஆகியோர் பேசினர்.
அதேபோன்று, கமுதி பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ரா.முத்துவிஜயன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையடுத்து அங்கு வந்த அபிராமம் காவல் ஆய்வாளர் ஜான்சிராணி தலைமையிலான காவலாளர்கள், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இதேபோன்று, முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தமுமுக கட்சியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் வட்டச் செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். தமுமுக நகரத் தலைவர் இக்பால் முன்னிலை வகித்தார். இதில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 20 பேரை முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் உத்தரவின்பேரில் காவலாளர்கள் கைது செய்தனர்.
இந்த நிலையில் பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக மீனவர்கள் சங்கத் தலைவர் எஸ்.பி.ராயப்பன் தெரிவித்தார்.
இப்படி, ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன.
