இராமநாதபுரம்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 8 பேரிடம் ரூ.40 இலட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் இராமநாதபுரம் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுஜிபிரமிளா முன்னிலை வகித்தார். 

இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச சேர்ந்த மக்கள் பங்கேற்று தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

இதில், இராமநாதபுரம் மாவட்டம், மென்னந்தி நாகரெத்தினம், முருகன், சந்தோஷ், தஞ்சாவூர் தம்பிகோட்டை ரவி, திருவாரூர் மேலமருதூர் மதிவாணன், சிவகாசி பிரகாஷ், ராமநாதபுரம் காரான் கவாஸ்கரன், தூத்துக்குடி வீரபாண்டியபுரம் ஹரிகரன் ஆகியோர் வந்து மனு ஒன்றை கொடுத்தனர். 

அதில், "திருப்புல்லாணி அருகே உள்ள தெற்கு மேதலோடையைச் சேர்ந்த காந்தி மகன் முனியராஜ், அங்குச்சாமி மகன் ராஜ்குமார் ஆகியோர் இலங்கை கண்டியில் உள்ள ஏஜெண்டு அசன்பாய் என்பவரின் மூலம் வெளிநாட்டிற்கு ஆள் அனுப்புவதாக தெரிவித்தனர். 

செர்ஜியா நாட்டில் தோட்ட வேலைக்கு ஆள் எடுப்பதாகவும் மாதம் ரூ.1 இலட்சத்து 20 ஆயிரம் சம்பளம் என்றும், அதற்காக ரூ.5 இலட்சம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். 

இவர்களின் பேச்சை நம்பி தலா ரூ.5 இலட்சத்தினை அவர்கள் இருவர் மூலம் இலங்கை ஏஜெண்டு அசன்பாய் என்பவரிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் வைத்து கொடுத்தோம்.

இந்த பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் எங்களை கடந்த மாதம் 17-ஆம் தேதி சென்னைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து சென்றனர். அங்கு மர்தானா என்ற பகுதியில் விடுதி ஒன்றில் தங்க வைத்த பின்னர் எங்களிடம் இலங்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால் ஒருசில நாள்களில் செர்ஜியாவிற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். நாங்களும் அதனை நம்பி விடுதியில் தங்கியிருந்தோம். 

ஐந்து நாள்கள் கழித்து வந்த அவர்கள் ரூ.5000 இலங்கை பணத்தினை கொடுத்து சாப்பாடு செலவிற்கு வைத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டுச் சென்றனர். அதன்பின்னர் அவர்கள் வரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோதும் எடுக்கவில்லை. இதனால் நாங்கள் செய்வதறியாது திகைத்து போனோம்.

எப்படியும் வந்துவிடுவார்கள் என்று ஒருமாதம் வரை காத்திருந்தோம். ஆனால், அவர்கள் வராததால் நாங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விடுதி கட்டணம் மற்றும் விமான கட்டணத்திற்கு ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் அனுப்ப சொல்லி அது வந்ததும் விடுதியை காலி செய்து இராமநாதபுரம் வந்துள்ளோம். 

வெளிநாட்டு வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி 8 பேரிடமும் ரூ.40 இலட்சம் வாங்கி மோசடி செய்த சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களின் பணத்தினை திரும்ப பெற்றுத்தர வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் நடராஜன் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.