Asianet News TamilAsianet News Tamil

ரூ.2 இலட்சம் கடனுக்காக ரூ.40 இலட்சம் சொத்தை அபகரிக்க முயற்சி; பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் குமுறல்... 

40 lakhs asserts cheated for Rs.2 lakhs loan Victims petition to collector
40 lakhs asserts cheated for Rs.2 lakhs loan Victims petition to collector
Author
First Published May 1, 2018, 11:18 AM IST


திருவள்ளூர்

ரூ.2 இலட்சம் கந்து வட்டிக்கு ஈடாக ரூ.40 இலட்சம் மதிப்புள்ள வீட்டு மனையை அபகரிக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

சென்னை, ஆலப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கரின் மகன் பாக்கியராஜ்(32). இவர் திருவேற்காடு மேட்டுத் தெருவைச் சேர்ந்த கோபி, ஜெகன் ஆகியோரிடம் ரூ.2 இலட்சம் கடனாக பெற்றார். 

அதற்கு ஈடாக 1450 சதுர அடி பரப்பளவிலான வீட்டு மனை மற்றும் கூரை வீட்டின் அசல் பத்திரத்தையும் பெற்றுக் கொண்டனர். இதன் மதிப்பு 40 இலட்சம் ஆகும்.

இதை சாக்காக வைத்து அதிகமான வட்டி கேட்டு தொந்தரவு செய்து வந்ததால் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வீதம் கடந்த 6 மாதங்களாக பணம் செலுத்தியும் வந்தனர். ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து வட்டி செலுத்த முடியவில்லை. 

இதனைத் தொடர்ந்து பாக்கியராஜுக்கு சொந்தமான மனையில் 450 சதுர அடியை மட்டும் மனையை விற்க முடிவு செய்து வளசரவாக்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரிடம் ரூ.9 இலட்சம் விலைபேசி முன்பணம் ரூ.50 ஆயிரத்தையும் கோபி, ஜெகன் பெற்றுக் கொண்டனர். 

அதனைத் தொடர்ந்து மீதித் தொகையை அவரிடம் வாங்க விடாமல் தடுத்ததுடன், நிலத்தின் அசல் பத்திரத்தையும் தராமல் காவல்துறை மூலம் பாக்கியராஜின் தாயார், சகோதரி ஆகியோரையும் விசாரணைக்கு அழைத்து அலைக்கழித்து வந்தனர். 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாக்கியராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர், சொத்துப் பத்திரத்தை மீட்டுத் தரக்கோரி ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் நேரில் மனு அளித்தனர். 

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து வளாகத்தில் நின்றிருந்த அக்குடும்பத்தினரை திருவள்ளூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் சந்தித்து விவரம் கேட்டறிந்தார். 

அப்போது, ஆய்வாளருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து அவர்களுக்கு ஆறுதல் கூறிய ஆய்வாளர், பாக்கியராஜ் குடும்பத்தினரை மதுரவாயல் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios