சென்னை வெளிவட்ட நெடுஞ்சாலையில் மேலும் 4 புதிய டோல்கேட் அமைக்கப்பட இருப்பதால் மக்கள் வாழ்வதா... ஓடுவதா...? என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

சென்னை ஒரு பக்கம் கடல். மறுபக்கம் சென்னை நாகை தேசிய நெடுங்சாலை, கடற்கரையோரம் கிழக்கு கடற்கரை சாலை, போரூர் வழியாக கொல்கத்தா நெடுஞ்சாலை,  எண்ணூர் நெடுஞ்சாலை என மொத்தம் 13 டோல்கேட்கள் உள்ளன. இந்நிலையில் எண்ணூர் நெடுஞ்சாலையில் சென்னை வெளிவட்ட சாலைகளில் மட்டும் 4 டோல்கேட் சாலைகள் புதிதாக அமைக்கப்பட உள்ளன. 

தமிழகத்தில் ஏற்கெனவே மொத்தம் 41 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில், தனியார் வசம் 29 சுங்கச்​சாவடிகளும் நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 12 சுங்கச்சாவடிகளும் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் உள்ள 41 டோல்கேட்கள் மூலம் ஆண்டு ஒன்றுக்குத் தோராயமாக 14,200 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஒரு டோல்கேட்டில் இருந்து மற்றொரு டோல்கேட்டுக்கு 60 கி.மீ தூரம் இடைவெளி இருக்க வேண்டும். மாநகராட்சியில் இருந்து 10 கி.மீ தூரம் தள்ளித்தான் டோல் பூத் அமைந்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் முடிந்தவுடன் சாலைகள் தோண்டப்பட்டுப் புதிய சாலைகள் போட வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உள்ளன. ஆனால் அந்த விதிமுறைகள் எதையும், நெடுஞ்சாலை ஆணையமோ, குத்தகை எடுத்த நிறுவனங்களோ பின்பற்றுவது இல்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.

மக்களிடம் அதிக பணத்தை வசூலித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னைக்கு மேலும் 4 புதிய டோல்கேட்டுகள் வர உள்ளதால் சென்னையை சுற்றியுள்ள மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்வதா..? ஊரை விட்டு ஓடுவதா? என புலம்ப ஆரம்பித்துள்ளனர்.