சேலத்தில் புதிதாக தொழில் தொடங்க விரும்பிய இளைஞரிடம், லஞ்சம் வாங்கிய 4 மின்வாரிய ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் நாழிக்கல் பிரிவுரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். கடலை எண்ணெய் ஆலையை தொடங்க விரும்பினார். இதற்காக பல்வேறு துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுரேந்திரனிடம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
இதனால் சுரேந்திரன், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அதை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார். அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் வீடியோவை சுரேந்திரன் வெளியிட்டார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் சுரேந்திரன் புகார் மனுவை கொடுத்தார்.
அதில், கடலை எண்ணெய் தயாரிக்கும் ஆலையை தொடங்குவதற்கு 5 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் 10–க்கும் மேற்பட்டோர் தன்னிடம் ரூ.14 ஆயிரத்து 500 வரை லஞ்சம் பெற்றதாகவும், அதை செல்போனில் படம் பிடித்து ஆதாரத்துடன் வைத்திருப்பதாகவும், எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து சேலம் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மணிவண்ணன் உத்தரவின்பேரில், மல்லூர் துணைமின் நிலைய உதவி இயக்குனநர் வேணுகோபால், இளநிலை பொறியாளர் சரவணன், களப்பணி உதவியாளர் கந்தசாமி மற்றும் வணிக ஆய்வாளர் கந்தசாமி உள்பட 4 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
