துப்புரவுப் பணியாளர்கள் குடியிருப்புப் பகுதியில் மூன்றாவது மதுக்கடைத் திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சி என்பிஎஸ் நகர், துப்புரவு காலனி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு ஒன்றை அளித்தனர்.  

“வேறு பகுதியில் உள்ள மதுபானக் கடையை இராசிபுரம் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் அருந்ததியர் குடியிருப்பு அருகே மாற்ற முயற்சி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இந்தக் குடியிருப்புக்குச் செல்லும் வழியில் 2 மதுபானக் கடைகள் உள்ளன. இந்த நிலையில், குடியிருப்புக்கு 50 மீட்டர் தொலைவில் புதிதாக கடை அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் இப்பகுதியில் ஏழை துப்புரவுத் தொழிலாளர்கள் பலர் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்தே அழித்துவிடுவர். இந்தத் தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும். மேலும் இப்பகுதியில் மதுக்கடை அமைந்தால் இங்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும்.

இதுபோல் அருகில் உள்ள என்.பி.எஸ். நகர் மக்களும், இந்த மதுபானக் கடை அமைந்தால் பல வகையிலும் பாதிப்புக்குள்ளாக நேரிடும். இதனால் துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வாதரம் மற்றும் இப்பகுதி மக்களின் பாதுகாப்பைக் கருதி இங்கு டாஸ்மாக் கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” என்று மனுவி குறிப்பிட்டு இருந்தனர்.