அரியலூர்

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள் 37 பேரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்.

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து வழக்குரைஞர்கள் சங்கத்தினர் கடந்த 16-ஆம் தேதி முதல் நாள்தோறும் உண்ணாவிரதம், மனித சங்கிலி போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனையடுத்து நேற்றும் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து, நீதி மன்றத்திலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அரியலூர் பேருந்து நிலையத்திற்கு வந்தனர். 

அதன்பின்னர் அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த மறியல் போராட்டத்திற்கு சங்க தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

இந்தப் போராட்டத்தில், "அரசு ஒதுக்கிய நிலத்தில் உடனடியாக நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு உடனடியாக தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த அரியலூர் காவல் துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ், காவல் உதவி ஆய்வாளர் ரவி சக்கரவர்த்தி ஆகியோர் மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

ஆனால், தொடர்ந்து வழக்குரைஞர்கள் மறியலில் ஈடுபட்டதால் நான்கு பெண் வழக்குரைஞர்கள் உள்பட 37 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.