விருப்பத்திற்கு மாறாக சிறை வைக்கப்பட்டுள்ள 31 தனித்தொகுதி எம்.எல்.ஏ.க்களை விடுவிக்கக் கோரி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது.
அப்போது, வளரும் சமூக வழக்கறிஞர்கள் முன்னணியின் சார்பில் வழக்கறிஞர்கள் அங்கு கூடினர். மாநில அமைப்பாளர் செபாஸ்டியன் அவர்களுக்கு தலைமை தாஙகினார்.
பின்னர் திடீரென ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் தெரிவித்ததாவது:
“மொத்தம் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில், 32 பேர் தனித்தொகுதி எம்.எல்.ஏ.க்கள் ஆவர். இவர்களில் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. தவிர மற்ற 31 பேரும் தங்களது விருப்பத்துக்கு மாறாக சிறை வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவர்களை விடுவிக்க வேண்டும். அவர்கள் தங்கள் தொகுதி மக்களின் கருத்துகளை கேட்டு சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும்.
மேலும், இதுவரை ஆளுங்கட்சியில் தனித்தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எனவே, அவர்களுக்கு முக்கிய துறைகளில் பிரதிநிதித்துவ அடிப்படையில் குறைந்தபட்சம் 7 அமைச்சர் பதவிகளாவது கேட்டுப்பெற வேண்டும்.
இல்லையென்றால் புதிய அரசை தனித்தொகுதி எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்க வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் வளரும் சமூக வழக்கறிஞர்கள் முன்னணியின் மாநில தலைவர் சௌந்திரபாண்டியன் உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன், காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) தேஸ்முக் சேகர் சஞ்சய் ஆகியோரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், “தமிழகத்தில் நிலவி வரும் நிரந்தரமற்ற அரசியல் சூழ்நிலையால் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இதற்கிடையே தனித்தொகுதி எம்.எல்.ஏ.க்கள் எங்காவது சிறைவைக்கப்பட்டு இருந்தால் அவர்களை விடுவிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
