30 villagers are demanding to ban shrimp farms that are causing health disorders

கடலூர்

சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வரும் பிச்சாவரம் பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை தடை செய்யக் கோரி சிதம்பரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 கிராமங்களைச் சேர்ந்த மக்களை காவலாளர்கள் கைது செய்தனர்.

சிதம்பரம் மாவட்டம் அருகே உள்ள பிச்சாவரம் பகுதியைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான இறால் பண்ணைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சில அரசின் அனுதி பெற்றும், பல உரிய அனுமதி இல்லாமலும் செயல்படுகின்றன.

இந்தப் பண்ணைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் கழிவுகளால் அந்த பகுதி முழுவதும் சுற்றுப்புற சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இங்கிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகளால் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நிலத்தடிநீர் கடுமையாக பாதிக்கப்பட்டு அப்பகுதியைச் சுற்றியுள்ள தா.சோ.பேட்டை, வடக்குபிச்சாவரம், தெற்கு பிச்சாவரம், திருவாசலடி, ராதாவிளாகம், உத்தமசோழமங்களம், குச்சிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மற்றொருபுறம் மாங்குரோவ் காடுகளின் முகத்துவாரங்களில் உப்பு நீரில் இனப்பெருக்கம் செய்யும் இறால், நண்டுகள், பலவகை மீன் இனங்கள் போன்றவை இந்த பண்ணைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகளால் அழிந்து வருகின்றன.

“சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வரும் இந்த இறால் பண்ணைகளை தடை செய்ய வேண்டும்,

பாதுகாக்கப்பட்ட பிச்சாவரம் வனப்பகுதியிலிருந்து இறால் பண்ணைகளுக்கு தேவையான தண்ணீர் எடுக்க, சட்ட விரோதமாக அனுமதித்த வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,

அந்த பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வசதி செய்து தர வேண்டும்,

கடலை நம்பியுள்ள மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர், வனத்துறை அலுவலர்களுக்கு மனுவாக அளித்தனர் மக்கள்.

மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர்.

மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி பிச்சாவரத்தை சுற்றிலும் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்களிடம் கையெழுத்து பெற்று, அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் அப்போதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இறால் பண்ணைகளை அகற்றக்கோரி கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் சிதம்பரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று காலை 11 மணியளவில், கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் அமைப்பாளர் ரமேஷ்பாபு, மாவட்ட குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமசந்திரன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் தலைமையில் பிச்சாவரத்தை சுற்றிலும் உள்ள 30 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டனர்.

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக வந்து, சிதம்பரம் பேருந்து நிலையம் முன்பு கடலூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வரும் இறால் பண்ணைகளை அகற்றக்கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான காவலாளர்கள் மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர் அஞ்சனாதேவி, கண்காணிப்பாளர் மாறன், தலைமையிடத்து துணை தாசில்தார் பழனியப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள், மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, மக்கள், இறால் பண்ணையை உடனே அகற்றும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.

அப்போது, காவலாளர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும், மறியல் நடந்த சாலை, பிரதான சாலை என்பதால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் காவலாளர்கள் அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், மறியலில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்றும், வலுகட்டாயமாக இழுத்துச் சென்றும் கைது செய்து காவல் வேனில் ஏற்றினர்.

அப்போது, காவலாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும், காவலாளர்களின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இருப்பினும் காவலாளர்கள் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, சிதம்பரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்தப் போராட்டத்தில் முப்பது கிராமத்தைச் சேர்ந்த 100 பெண்கள் உள்பட 185 பேர் கைது செய்யப்பட்டனர்.