வேலூர்  அருகே, தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள், மேற்பார்வையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மிட்டாளம் பகுதியில் தோல் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்த கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. மேற்பார்வையாளர் ரங்கநாதன், தொழிலாளர்கள் செல்வம், கோதண்டன் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி செல்வம், கோதண்டன், மேற்பார்வையாளர் ரங்கநாதன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். தோல் தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தை அடுத்து, அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு, தொழிற்சாலை வளாகத்தில் வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தற்போது வரை சம்பவம் நடந்த இடத்துக்கு எந்தவொரு அதிகாரியும் வரவில்லை என்று கூறப்படுகிறது. 

விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தது குறித்து அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் இதுவரை அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது.