போலி இருப்பிடச் சான்றிதழ் அளித்து மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற்ற 3 கேரள மாணவர்களின் அட்மிஷன் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 1 கேரள மாணவரின் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக நீட் தேர்வு மதிப்பெண்களின், அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறுவதாலும், அகில இந்திய ஒதுக்கீடு, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில் மிகவும் தாமதமாக மாநில இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளதாலும் பல்வேறு குளறுபடிகளும், குழப்பங்களும் நிலவுகின்றன.

செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் அட்மிஷனை முடிக்க வேண்டும் என்பதால் விடுமறை நாட்கள் என்றும் பாராமல் கடந்த  வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் கலந்தாய்வு நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை, போலி இருப்பிடச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து கலந்தாய்வில் பங்கேற்றுள்ளதாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த 9 மாணவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது,.

மேலும் புகார்கள் அளிக்கப்பட்ட மாணவர்கள் தமிழகத்தில் இருப்பிடச் சான்றிதழைப் பெற்று தமிழகத்திலும், பிற மாநிலத்தில் சான்றிதழைப் பெற்று அந்த மாநிலத்தில் நடைபெற்ற கலந்தாய்விலும் பங்கேற்றதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து போலி இருப்பிட சான்றிதழ் மூலம் மருத்துவ படிப்பில் சேர முயன்றவர்கள் அளித்த சான்றிதழ் போலி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த 3 மாணவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போலி இருப்பிட சான்றிதழ் அளித்து தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர முயன்ற ஆசிக் சுலைமான் என்ற மாணவனுக்கு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது.

போலி இருப்பிட சான்றிதழ் அளித்த மாணவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசிக் சுலைமான் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் இருப்பதால், மற்ற 3 மாணவர்களின் மருத்துவ படிப்பு சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் கேரள மாணவர்களுக்கு போலி சான்றிதழ் வழங்கிய விஏஓ, வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.